போராடும் ஆசிரியர்களைக் கைதுசெய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” சம வேலைக்கு சம ஊதியம், முழுநேர ஆசிரியர் பணி, பணிநிரந்தரம் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் கடந்த ஒரு வாரமாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டத்தில் கலந்து கொண்ட பலர் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அரசு இவர்களோடு பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. ஆயினும், கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத சூழ்நிலையில் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் போராடும் ஆசிரியர்களை கைது செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஆசிரியர் போராட்டம் தொடரும் நிலையில் மாணவர்களின் கல்வியும் பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது.” என்று கூறியுள்ளார்.
காலதாமதமின்றி போராடும் ஆசிரியர்களின் கோரிக்கைகளின் மீது பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு காண வேண்டுமெனவும், ஆசிரியர்கள் மீது கைது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது எனவும், கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.