வைகோ, இடதுசாரிகள், திருமா
வைகோ, இடதுசாரிகள், திருமா

ஆளுநருக்கு வைகோ, இடதுசாரிகள், திருமா கண்டனம்!

சட்டப்பேரவையில் ஆளுநர் இரவி இன்று நடந்துகொண்டது அத்துமீறல் என்று தி.மு.க. கூட்டணி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், அவரைப் பதவிநீக்கம் செய்யவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். 

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ:

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.இரவி அவர்கள் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கியபோது தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை முழுமையாக வாசிக்காமல் அதில் இடம்பெற்றிருந்த தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் உட்பட்ட பெயர்களை தவிர்த்தார்.

மேலும் திராவிட மாடல் ஆட்சி, சமூக நீதி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமத்துவம், மதநல்லிணக்கம், பெண்ணுரிமை ஆகிய கொள்கைகள் இன்றைய அரசின் அடித்தளமாக அமைந்துள்ளன என்ற பத்தியை உரையில் இருந்து நீக்கிவிட்டு படித்தார். சட்டப்பேரவையில் நாட்டுப்பண் இசைக்கும்போதே அநாகரிகமாக அவையில் இருந்து எழுந்து வெளியேறினார். அதைப்போலவே இந்த ஆண்டு இன்றையக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியபோதும், சட்டப் பேரவையின் மரபுக்கு எதிராக தேசியக் கீதத்தை தொடக்கத்திலேயே இசைக்க வேண்டும் என்ற காரணம் கூறி ஆளுநர் உரையை வாசிக்காமல் முழுமையாக புறக்கணித்து வெளியேறியது கடும் கண்டனத்திற்கு உரியதாகும். சட்டப்பேரவை நிகழ்வு தொடங்கும்போது தமிழ்த்தாய் வாழ்த்தும், நிறைவடையும்போது நாட்டுப்பண் இசைக்கப்படுவதும்தான் தமிழக சட்டப்பேரவையின் நீண்டகால மரபு ஆகும். ஆனால் ஆளுநர் அதனை மாற்றக்கோரியது திட்டமிட்ட சதியாகும்.

பின்னர் ஆளுநர் உரையை சட்டப்பேரவைத் தலைவர் வாசித்து அவைக்குறிப்பேட்டில் இடம்பெற செய்திருப்பது வரவேற்கத்தக்கதாகும். ஆளுநர் ஆர்.என்.இரவி தொடர்ச்சியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக அரசியல் சட்ட நெறிமுறைகளை மீறி தொடர்ந்து செயல்பட்டு வருவது ஏற்றுக்கொள்ளதக்கதல்ல. 

வி.சி.க. தலைவர் திருமாவளவ்ன்:

அரசியலமைப்புச் சட்ட மரபுகளுக்கு மாறாகவும், தமிழ்நாட்டு மக்களை அவமதிக்கும் வகையிலும் இன்று சட்டப் பேரவையில் நடந்து கொண்டுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களின் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

திட்டமிட்டே மாநில அரசோடு முரண்பாட்டைக் கூர்மைப்படுத்தி அரசியல் அரங்கில் அவ்வப்போது தேவையற்ற பரபரப்பை உண்டாக்கும் ஆளுநர், தனது பொறுப்பையும் பொறுப்புக்குரிய மாண்பையும் மறந்து ஒரு கட்சியின் பிரதிநிதியைப் போலவே செயல்பட்டு வருகிறார். எனவே, அவர் ஆளுநர் பதவியிலிருந்து விலகுவதோடு தமிழ்நாட்டிலிருந்தும் வெளியேற வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

மாநில அரசு தயாரித்துக் கொடுக்கப்படும் உரையைப் படிப்பதென்பது ஆளுநருக்கு அரசியலமைப்புச் சட்டம் விதித்துள்ள கடமையாகும். அதை இன்று ஆர்.என்.ரவி அவர்கள் நிராகரித்துள்ளார். இது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசை மட்டுமின்றி, அவர் இந்தப் பதவியை வகிப்பதற்குக் காரணமான அரசியலமைப்புச் சட்டத்தையும் அவமதிப்பதாகும். அரசியலமைப்புச் சட்டப்படி விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்யாமல் தொடர்ந்து இவ்வாறு அதை அவமதித்து வரும் ஆர்.என். ரவி அவர்கள் எந்த அடிப்படையில் ஆளுநர் பதவியில் நீடிக்கிறார் என்ற கேள்வி எழுகிறது. அவர் ஆளுநர் பதவி வகிப்பதற்கு மட்டுமல்ல, இந்த நாட்டின் குடிமகனாக இருப்பதற்கும்கூடத் தகுதியற்றவர் என்பதையே அவரது செயல்கள் காட்டுகின்றன.

ஆர்.என்.ரவி அவர்கள், தமிழ்நாடு அரசுக்கு எதிராகப் பொதுவெளியில் தொடர்ந்து உண்மைக்கு மாறான தகவல்களைப் பரப்பி வருகிறார். சாதியின் அடிப்படையிலும், மதத்தின் அடிப்படையிலும் மக்களைப் பிளவுபடுத்தும் வகையில் பிரிவினையைத் தூண்டும் கருத்துக்களைத் தொடர்ந்து கூறி வருகிறார். அதன் மூலம் இங்கே சட்டம் ஒழுங்குப் பிரச்சனையை ஏற்படுத்த முயற்சிக்கிறார் . அவர் வகிக்கும் ஆளுநர் பதவியை இப்படியான சட்ட விரோதச் செயல்களுக்குக் கவசமாகப்  பயன்படுத்துவதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இத்தகைய போக்குள்ள அவர் தொடர்ந்து தமிழ்நாட்டில் இருப்பதே தமிழ்நாட்டு மக்களுக்குக் கேடாக முடியும். எனவே, அவரைத் தமிழ்நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கு உரிய சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.

“ ஆளுநர் பதவி என்பது பிரிடிஷ் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டு சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்துக்குள் தங்கிவிட்ட ஒன்றாகும். ஒன்றிய அரசால் ஆளுநர் நியமிக்கப்படுவதாகச் சொல்லப்பட்டாலும் ஒன்றிய அரசை ஆட்சி செய்யும் கட்சியாலேயே அவர் நியமிக்கப்படுகிறார். நடுநிலைக்கும் அவருக்கும் எந்தவொரு தொடர்பும் இருப்பதில்லை. தன்னை நியமிக்கும் கட்சியின் முகவராகவே அவர் செயல்படுகிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளுக்குத் தொல்லை தருவதற்கும், தமக்குப் பிடிக்காத கட்சிகளை உடைப்பதற்கும், மாநிலத்தில் நிலையற்ற தன்மையை உருவாக்குவதற்கும் ஒன்றிய அரசால் ஆளுநர் பயன்படுத்தப்படுகிறார். மாநில அரசுகளைக் கலைப்பதற்கு ஆளுநரைத்தான் ஒன்றிய அரசு பயன்படுத்துகிறது. மாநில அரசுகள் இயற்றுகிற சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை முடக்குகிற வேலையில் ஆளுநர்கள் ஈடுபடுவதைப் பார்க்கிறோம்.

மாநில அரசுக்கும் ஒன்றிய அரசுக்கும் இடையில் ஆளுநர் என்ற பதவி எந்தவிதத்திலும் தேவையாக இல்லை. எனவே ஆளுநர் பதவியை ஒழிக்கவேண்டும்.

சி.பி.ஐ.(எம்)  மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

 

சட்டப்பேரவையின் ஆளுநர் உரையுடன் கூடும் 2024ன் முதல் கூட்டத் தொடரில் மாநில அரசின் கொள்கை குறிப்பை படிக்க மறுத்து, அரசியல் உள்நோக்கத்துடன் வெளிநடப்பு செய்துள்ள ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கையினை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. ஆளுநர் உரை என்பது ஆளுநரின் தனிப்பட்ட கருத்துக்களின் தொகுப்பு அல்ல. அவரின் சொந்தக் கருத்துக்களை கூற சட்டப்பேரவை இடமும் அல்ல. ஆளுநர் ஆர்.என். ரவி,  தேசியகீதத்தை முதலில் பாட வேண்டுமென்று ஏற்கனவே கோரிக்கை விடுத்ததாகவும், அதற்கு தீர்வு இல்லை என்றும், உரையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்களுடன் முரண்படுகிறேன் என்றும் கூறி கேரள ஆளுநர் பாணியில் 2 நிமிடங்களில் உரையை முடித்துக் கொண்டார்.

இந்நிலையில் பேரவை தலைவர், ஆளுநர் உரையை தமிழில் முழுவதும் வாசித்து நிறைவு செய்து விட்டு, தேசிய கீதம் இசைப்பது தொடர்பாக ஆளுநர் ரவிக்கு ஏற்கனவே கடிதம் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்று பதில் அளிக்கும் போது, ஆளுநர் ரவி கிஞ்சிற்றும் நாகரீகம் இல்லாமல், கடந்த ஆண்டைப் போலவே, தேசிய கீதம் இசைக்கும் முன்பே வெளியேறிச் சென்றது அரசியல் சாசனத்தை மீறிய செயலாகும். இதன் மூலம் தமிழக சட்டமன்றத்தையும் தமிழக மக்களையும் ஆளுநர் அவமதித்துள்ளார். இது கடும் கண்டனத்திற்குரியது. தேசிய கீதத்தை ஆளுநர் அவமரியாதை செய்தார் என்பதும் தெளிவாக வெளிப்பட்டது.

தமிழகத்தின் மாண்பையும், சட்டமன்றத்தின் மரபையும் நிலைநிறுத்தும் வகையில் அமைச்சரவை தயாரித்த முழு உரையும் அவைக்குறிப்பில் ஏற்றப்படும் என்று உடனடியாக அவை முன்னவர் நடவடிக்கை மேற்கொண்டது ஆளுநருக்கு அளிக்கப்பட்ட தகுந்த பதிலடியாக அமைந்தது.

அரசமைப்பு சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடந்து கொள்ள வேண்டிய ஆளுநர், ஆர்.எஸ்.எஸ்.சின் தொண்டராக செயல்படுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். தமிழ்நாடு அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கைக் கடைபிடிக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. ஆளுநரின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கும், தமிழக விரோதப் போக்கிற்கும் எதிராக தமிழக மக்களும், ஜனநாயக சக்திகளும் தங்களது வலுவான கண்டன குரலை எழுப்பிட வேண்டுமென சிபிஐ (எம்) வலியுறுத்துகிறது.

சி.பி.ஐ. கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்

மக்கள் பிரதிநிதித்துவ ஆட்சி முறையில் ஆண்டு தோறும் சட்டமன்ற பேரவையில் உரையாற்றி கூட்டத் தொடரை தொடங்கி வைப்பது அரசியலமைப்பு சட்டப்படி ஆளுநரின் கடமைப் பொறுப்பாகும்.

வரும் ஆண்டில் (2024-25) மக்கள் பிரச்சினைகள் மீதும், நிதி நிர்வாக முறையிலும் அரசின் கொள்கை நிலை என்ன? எந்த இலக்கை நோக்கி அரசு பயணிக்கும்? என்பது போன்ற அரசின் கொள்கை நிலையை பேரவையின் கவனத்துக்கு கொண்டு, அதன் மீது எதிர் தரப்பின் கருத்துக்களை அறிவது என்பது அரசியலமைப்பு சட்டம் ஆளுநருக்கு வழங்கியுள்ள கடமையாகும். பேரவையில் உரையாற்றும் ஆளுநருக்கு பேரவையின் வாயிலாக “நன்றி தெரிவிக்கும்” தீர்மானம் நிறைவேற்றி அவருக்கு அனுப்புவது அவை வழியாக கடைப்பிடித்து வரும் மரபாகும். இந்த வழக்காறுகளுக்கும். மரபுகளுக்கும் மாறாக தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர் என் ரவி கடந்த ஆண்டு. நடந்து கொண்டது போலவே இந்த ஆண்டும் அவையில் மரபுகளை நிராகரித்து, மக்கள் பிரதிநிதிகள் உணர்வுகளையும் புறக்கணித்துள்ளார். கூட்டத் தொடக்கத்தில் தமிழ் தாய் வாழ்த்தும், நிகழ்ச்சி நிறைவில் நாட்டுப் பண் இடம் பெறுவதும் நீண்ட பல ஆண்டுகளாக பின்பற்றி வரும் நல் மரபாகும். இதற்கு மாறாக ஆளுநர் திரு ஆர் என் ரவி, அரசுடன் இணைந்து தயாரித்த உரையை. வாசித்து பேரவைக்கு வழங்க மறுத்து அமர்ந்து விட்டதும், நாட்டுப் பண் இசைக்கும் முன்பு வெளியேறியதும் ஜனநாயக மாண்புகளை சிதைத்து, அரசியல் ஆதாயம் தேடும் மலிவான செயலில் ஈடுபட்டிருப்பதை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

logo
Andhimazhai
www.andhimazhai.com