அமைச்சர் பொன்முடி
அமைச்சர் பொன்முடி

ஆளுநர் பட்டமளிப்பைப் புறக்கணிப்பது ஏன்?- அமைச்சர் பொன்முடி விளக்கம்!

நாளை நடைபெறவிருக்கின்ற மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை இணை வேந்தர் என்ற முறையில் புறக்கணிப்பதாக முடிவெடுத்திருக்கிறேன் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு இன்று அளித்த பேட்டியில், “நாளை நடைபெறவிருக்கிற பட்டமளிப்பு விழாவில் மரியாதைக்குரிய அய்யா சங்கரய்யா அவர்களுக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்க வேண்டும் என்று அந்த பல்கலைக்கழகத்தினுடைய ஆளவை மன்றம் (Syndicate), ஆட்சிமன்றம் (Senate) இரண்டுமே தீர்மானங்களை நிறைவேற்றி மாண்புமிகு ஆளுநருக்கு அனுப்பி இருந்தோம். அதற்கு பிறகும் அவர் அதை நிராகரித்தார். அதுவும் குறிப்பாக, இந்த தீர்மானங்களை 18.08.2023 நடைபெற்ற காமராஜர் பல்கலைக்கழக ஆட்சிக்குழு, அதேபோல 20.09.2023 நடைபெற்ற அந்த பல்கலைக்கழகத்தின் ஆட்சிப் பேரவைக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சங்கரய்யா அவர்களை பற்றி ஆளுநருக்கு தெரியாவிட்டால், கேட்டிருக்கவேண்டும்.” என்றும் கூறினார். 

மேலும், “சங்கரய்யா 1922-ல் பிறந்தவர். அமெரிக்கன் கல்லூரியில் பட்டப்படிப்பில் இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்தபோது, அந்த படிப்பை நிறுத்திவிட்டு சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு ஐந்து ஆண்டுகள் சிறையில் இருந்தவர். அதுமட்டுமல்ல, அதற்கு பிறகும் கூட சமூக நீதிக்காக, பொருளாதார சமத்துவத்திற்காக, பலமுறை போராட்டங்களை சந்தித்து, அவர் நான்கு ஆண்டு காலம் சிறையில் இருந்தவர். ஆகவே, 9 ஆண்டு காலம் சிறையில் இருந்தவருக்கு, சுதந்திர போராட்ட வீரராக இருந்த ஒருவருக்கு இன்றளவும் 102 வயதிலும், மக்களுக்காக குரல் கொடுத்துக் கொண்டிருக்கிற அவருக்கு ஒரு கௌரவ முனைவர் பட்டம் கொடுக்க வேண்டும் என்று ஆளவை மன்றமும் ஆட்சி மன்றமும் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிய பிறகும், மறுத்திருக்கிறார். அவர் மறுத்ததற்கு பிறகு மீண்டும் ஒருமுறை அந்த ஆளவை மன்றம் மற்றும் ஆட்சிமன்றம் அந்த தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்பியிருக்கிறார்கள். அந்த பல்கலைக்கழகத்தின் விதி என்னவென்றால், மேற்படி கௌரவ பட்டம் வழங்கும் அதிகாரம் மதுரை காமராஜர் பல்கலைக்கழக சட்டம் 1965 அத்தியாயம் 20 தொகுதி 1-ல் ஆட்சி பேரவைக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆளவை மன்றம் & ஆட்சி மன்றத்திற்கு தான் அந்த அதிகாரம் இருக்கிறது.

எந்த ஒரு சட்டத்தையும் அவர் மதிப்பதில்லை. திராவிட மாடல், பொருளாதார சமத்துவம், சமூகநீதி ஆகியவற்றை எல்லாம் பேசுபவர்களை கண்டாலே அவருக்கு பிடிப்பதில்லை. அதனால் தான் கௌரவ முனைவர் பட்டம் கொடுக்க கூடாது என்ற எண்ணத்தில் அவர் இருக்கிறார். சுதந்திர போராட்ட வீரர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று கேட்கிறார். தமிழக மக்களுக்காக போராடிய திரு. சங்கரய்யா அவர்களுக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்க மறுப்பதற்கான காரணம் என்ன? விளக்கம் கொடுக்க தயாரா? ஏன் கொடுக்கவில்லை என்று சொல்ல முடியுமா?

நீண்ட காலம், இந்த சமுதாயத்திற்காகப் போராடியவருக்கு முதன்முதலாக “தகைசால் தமிழர் விருது” வழங்கப்படும் என அறிவித்தார்கள். முதன்முதலாக திரு. சங்கரய்யா அவர்களுக்கு தகைசால் தமிழர் விருதை முதலமைச்சர் வழங்கினார். அந்த விருதை வழங்குகிறபோது அவருக்கு கொடுக்கப்பட்ட 10 இலட்சம் ரூபாய் தொகையை கூட அவர் பெற்றுக் கொள்ளாமல், எனக்கு இவை வேண்டாம், நீங்கள் தங்களுடைய அரசு பணத்திலேயே சேர்த்து ஏழை மக்களுக்கு உதவுங்கள் என்று சொன்ன சங்கரய்யாவுக்கு இன்று ஆளுநர் கௌரவ முனைவர் பட்டம் கொடுப்பதற்கு மறுக்கிறார்.

அந்த காலத்தில் பாரதிதாசனார் நடிப்பு சுதேசிகள் நிறைய பேர் இருக்கிறார்கள் என்று பாடியிருக்கிறார். இப்போது நடிப்பு சுதேசியர்களாக இந்த ஆளுநர் போன்றவர்கள் இருப்பது உண்மையிலேயே வருந்தத்தக்கது. ஒரு சுதந்திர போராட்ட வீரருக்கு, ஒரு பொதுவுடைமைவாதிக்கு, 102 வயதில் வாழ்ந்து கொண்டிருக்கிற ஒருவருக்கு கௌரவ முனைவர் பட்டம் கொடுக்காததற்கு காரணம் என்ன? சொல்லச் சொல்லுங்கள். அதைச் சொல்வதற்கு அவருக்கு தைரியம் இல்லை.

நான் உங்கள் மூலமாகவே அவருக்கு வேண்டுகோள் விடுத்தேன். இரண்டாவது முறையாகவும் வேண்டுகோள் விடுத்தேன். ஆனால் எதையும் அவருடைய செவிகளில் ஏற்கவில்லை. அவருக்கு எதுவும் தெரியாத காரணத்தினால், அவர் தமிழக வரலாற்றைப் புரிந்து கொள்ளாமல்,

திரு. சங்கரய்யா அவர்களுக்கு கொடுக்கவிருந்த இந்த கௌரவ முனைவர் பட்டம் கொடுப்பதற்கு அவர் மறுக்கிறார். இவரைப்போல உண்மையிலேயே சுதந்திரப் போராட்டத்திற்கு எதிரிகள் இருக்க முடியாது. காரணம் என்னவென்றால், அவர் அந்த காலத்திலிருந்து RSS-ல் இருந்தவர். அவர்களுக்கு சுதந்திர போராட்ட வீரர்கள் மீதெல்லாம் மதிப்பு கொடுப்பது கிடையாது. அவர் ஆர்.எஸ்.எஸ். பிஜேபி அரசாங்கத்தினுடைய ஏஜெண்ட், அதுவும் அவர்கள் சொல்லி இவர் செய்கிறாரா? இவரா செய்கிறாரா என்பது தெரியவில்லை, இருந்தாலும் அவர் செய்வதெல்லாம் பிஜேபி-க்கும், அதேபோல, ஆர்எஸ்எஸ்-க்கும் ஆதரவாகத்தான் இதையெல்லாம் செய்கிறார் என்பது மிகத் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

அந்த அடிப்படையில்தான் அவர் தினமும் பொய் சொல்வதையே தன்னுடைய தொழிலாகக் கொண்டிருக்கிறார். ஆளுநர் வீட்டிற்கு எதிரே நடந்ததை என்ன மாதிரி என்று உங்களுக்கே தெரியும், காவல்துறையினர் மிகச் சிறப்பாக எல்லா மக்களுக்கும் தெரியும் வகையில், புரிகின்ற வகையில் வெளியிட்டதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதுபோல நடந்து கொண்டிருக்கிற பொழுது, அவர் உடனே என்ன சொல்கிறார், கவர்னர் மாளிகைக்குள் வந்தார்கள், வீசினார்கள், போனார்கள், இதற்கு ஒரு அளவு இல்லையா? ஒரு ஆளுநர் என்றால் யார்? நான் அடிக்கடி சொல்வதுண்டு, He is only a nominal Executive பெயரளவுக்குதான் நிர்வாகி.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சரவையில் இருப்பவர்கள் தான் real executive அதுதான் உண்மை. அந்த Real executive இருக்கின்றவர்கள் சொல்வதை கையெழுத்து போடுவதுதான் அவருடைய வேலை. அதற்குதான் உச்ச நீதிமன்றத்துக்கு நாங்கள் சென்றிருக்கிறோம். உச்ச நீதிமன்றத்திற்கு சென்றதற்கு காரணம், பல்வேறு கோப்புகளில் கையெழுத்து போடாமல் வைத்திருக்கிறார். அடித்தட்டு மக்களுக்கு உதவ வேண்டிய அவசியம் இருக்கின்ற இந்த காலகட்டத்தில், இவ்வளவு நிதி நெருக்கடி இருக்கின்ற நேரத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அடித்தட்டு மக்களுக்கு எவ்வளவு செய்து கொண்டிருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியும். ஆகவே நீங்கள் குறிப்பாக அவருக்கு சொல்ல வேண்டியது இதுதான். மாண்புமிகு ஆளுநர் அவர்களே, முதலில் நான் சொன்ன மாதிரி, You are not a real executive. நீங்கள் உண்மையிலேயே நம்முடைய தமிழகத்தினுடைய அமைச்சரவை என்ன சொல்லுகிறதோ அதை செய்ய வேண்டியவர்.

நீங்கள் நியமிக்கப்பட்டு இருக்கலாம், ஆனால், நீங்கள் அவர்கள் சொல்லுவதை கேட்டு, இந்த ஆட்சி நடத்த வேண்டும் என்பது இல்லை, அது தெளிவாக அரசியலமைப்பு சட்டத்திலேயே இருக்கிறது. அமெரிக்காவில் கவர்னர் இருக்கிறார் என்றால், He is elected, அது உண்மையான federation. இந்தியாவிலேயே இருப்பது Quasi federation. இந்திய நாட்டில் மாநில உரிமைகளைப் பறிக்கும் வகையில் ஒரு மாநில ஆளுநர் செயல்படுகிறார் என்று சொன்னால் அது மிகவும் கண்டிக்கத்தக்கது. ஆளுநர் அவர்களே, நீங்கள் வேண்டுமென்றால், தேர்தலில் நின்று, ஜெயித்து வாருங்கள். வந்த பிறகு, உங்கள் RSS, பிஜேபி கருத்துக்களை எல்லாம் பேசுங்கள். அதற்கு அவருக்கு தைரியம் கிடையாது.

அப்படி இருக்கின்ற ஒருவர், நியமிக்கப்பட்ட ஒரு ஆளுநராக இருந்து கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுடைய பிரதிநிதியாக இருக்கின்ற இந்த அமைச்சரவை கூடுகின்ற சட்டங்களில் கையெழுத்திட மறுக்கிறார் என்று சொன்னால், இதை விட மோசமான ஆளுநர் இதுவரை இருந்ததில்லை. நானும் ரொம்ப நாளாக மாணவ பருவத்திலிருந்து ஆளுநர்களை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் இவரைப்போல தவறு செய்பவர்கள் யாரும் இருக்க முடியாது. இவரை போல பொய் பேசுபவர்கள் யாரும் இருக்கமுடியாது. உண்மைக்கு புறம்பான பல்வேறு செய்திகளை எடுத்து வைத்து இந்த ஆட்சியின் மீது எப்படியாவது ஒரு கலங்கத்தை கற்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் ஆளுநர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்பதை நாட்டு மக்கள் மிகத் தெளிவாக புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆகவேதான் திரு. சங்கரய்யா அவர்களுக்கு, பல்கலைக் கழகம் கௌரவ முனைவர் பட்டம் கொடுப்பதை நாங்கள் வரவேற்றோம். அதை செய்யவேண்டும் என்று சொன்னோம். ஆளவை மன்றம், ஆட்சிமன்றம் கொண்டு வந்த தீர்மானம் எல்லாம் நிறைவேறியது. ஆனால் ஆளுநர் அவர்கள் அதற்கு மறுத்திருக்கிறார். அதனால்தான் நாளை மதுரையில் நடைபெறவிருக்கின்ற பட்டமளிப்பு விழாவில் நான் கலந்து கொள்வதாக இல்லை. இன்றைக்கும் ஆசிரியர் சங்கத்திலிருந்தும் ஒரு அறிக்கையை கொடுத்திருக்கிறார்கள். இவ்வளவு பேர் சொல்லியும், இவர் கேட்கமாட்டேன் என்று சொல்கிறார் என்றால், இவர் எந்த எண்ணத்தில் செயல்படுகிறார் என்பதை பத்திரிகையாளர்களாக இருக்கின்ற நீங்கள்தான் தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும். ஆகவே, ஆளுநர் அவர்களை பொறுத்தவரையில், நாளைக்கு அவர் நடத்தயிருக்கின்ற பட்டமளிப்பு விழாவில் நாங்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்கிறோம் என்பதை உங்கள் மூலமாக தெரிவித்துக் கொள்கிறேன்.

அவர்தான் அதை நடத்துகிறார். முன்பு பட்டமளிப்பு விழா நடத்தும்போது இணை வேந்தர், வேந்தர், Chief guest-ம் பேசுவார்கள். இப்போது, என்னையும் பேசவிடுவதில்லை, அவரும் பேசுவதில்லை, Chief guest மட்டும் பேசினால் போதும் என்று பட்டமளிப்பு விழா நடத்துவதை எங்கேயாவது பார்த்திருக்கிறீர்களா? இவர்தான் அதைச் செய்கிறார். அவருக்கு வேந்தர் என்ற பதவியை பயன்படுத்திக்கொண்டு, எது வேண்டுமானாலும் செய்யலாம் என்றுதான் நினைக்கிறார். அதனால்தான் வேந்தருக்கு எதிர்ப்பு தெரிவிக்கவேண்டும் என்ற கட்டாயம் எனக்கு இருக்கிறது. அந்த அடிப்படையில்தான், நாங்கள் இந்த பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கிறோம்.

இங்கே எந்த கடிதமும் வந்ததுபோல தெரியவில்லை. இன்னும் சொல்லவேண்டும் என்று சொன்னால், இங்கிருந்து அங்கே உள்ள செயலாளரிடம் பேசியிருக்கிறார்கள். துணை வேந்தர் மற்றும் பதிவாளர் நேரடியாக பேசியிருக்கிறார்கள். அவர்கள் பேசியதையும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை.

அவர்கள் நேரடியாகவே சென்று ஆளுநரிடம் இதை கொடுக்கவேண்டும் என்ற வேண்டுகோள் வைத்திருக்கிறார்கள். அப்படி வைத்தும் அவர் கேட்கவில்லை. மேலும், அவர் RSS, பிஜேபி-யை சேர்ந்தவர். பொருளாதார சமத்துவம், சமூகநீதி பேசுகின்ற திராவிட இயக்கத்தை சேர்ந்தவர்கள் மற்றும் அதற்கு பாடுபட்டவர்கள், சுதந்திர போராட்ட வீரர்களை அவர் புறக்கணிக்க வேண்டும் என்று நினைக்கிறார். அதுதான் இதற்கு காரணமாக இருக்கமுடியும்.

மாண்புமிகு அமைச்சர் பதில் : மாநில அரசு நியமிக்கும் அதிகாரம் ஒன்று. சென்னைப் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தர் பணியிடம் காலியாக இருக்கிறது. அதேபோல திறந்தவெளி பல்கலைக் கழகத்தில் பணியிடம் காலியாக இருக்கிறது. அங்கெல்லாம், துணை வேந்தர்களை நியமிப்பதற்கு ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கும். அந்த குழுவை யாரால் நியமிக்கப்படவேண்டும் என்பதற்கு அந்த பல்கலைக் கழக விதியில் சொல்லப்பட்டிருக்கிறது. அந்த விதியில் அவர்கள் சொல்லப்பட்டிருப்பதை தவிர, ஆளுநர் அவர்கள் என்ன செய்கிறார் என்றால், இரண்டு பேரை அதில் சேர்க்கவேண்டும் என்று நினைக்கிறார். எனவே சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேறி இருப்பது துணை வேந்தரை நியமிக்கின்ற அதிகாரம் தமிழக அரசுக்கு கொடுக்கவேண்டும் என்று நாங்கள் கேட்டிருக்கிறோம். அரசு ஆணை இருக்கிறது. அதில் இன்னொருவரை சேர்த்து அவர் நியமிக்கிறார்.

UGC- நீதிமன்றத்தில் சொல்லும்போது it will depends upon the will of the states மாநிலங்களின் விருப்பத்தை பொறுத்து அவர்கள் சொன்னால், நியமிக்கலாமே தவிர, நியமித்தே ஆகவேண்டும் என்று எங்கேயும் சொல்லவில்லை. UGC-க்கு அந்த அதிகாரம் கிடையாது. எதற்கு ஆளவை மன்றம், ஆட்சிமன்றம் எல்லாம் பல்கலைக் கழகத்தில் இருக்கிறது. அவர்களுக்கு அதிகாரம் இருக்க வேண்டாமா? அவர்கள் ஒரு முறைக்கு இரண்டு முறையாக நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்திற்கு ஒரு கௌரவ முனைவர் பட்டம் கொடுக்க மாட்டேன் என்று சொல்கிறார். மூன்று பேர் கொண்ட குழுவால் ஆளவை மன்றம், ஆட்சிமன்றம் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றியது. அந்த குழுவையும் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று சொல்கிறார்கள். இன்னொருவரை நியமியுங்கள் என்று அவர்களுடைய ஆட்களை கொண்டு வந்து திணிக்கிறார்கள். வட இந்தியாவில் உள்ள ஆட்களை கொண்டு திணிக்கிறார்கள். இதையெல்லாம் நாம் பார்க்கின்றபோது, நிச்சயமாக இந்த திராவிட மாடல் என்றாலே அவருக்கு கசப்பாக இருக்கிறது. ஆகவே தான் இந்த வேலைகள் எல்லாம் செய்து கொண்டிருக்கிறார் என்பது நடைமுறையில் மக்கள் தெளிவாக புரிந்து கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தை பொறுத்தவரையில் திராவிடத்தை யாராலும் அசைக்க முடியாது, அது உண்மை.” என்று அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com