பழ.நெடுமாறன்
பழ.நெடுமாறன்

ஆளுநர் பதவியை ஒழிக்க வாக்குறுதி - எதிர்க்கட்சிகளுக்கு நெடுமாறன் வேண்டுகோள்!

இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று கூடி அடுத்த தேர்தலுக்கான வாக்குறுதியாக ஆளுநர் பதவியை ஒழிப்பது குறித்து அறிவிக்க வேண்டும் என்று உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் கேட்டுக்கொண்டுள்ளார். 

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

“ மக்களுக்காக தியாகம், தொண்டு, துன்பம் ஆகியவற்றை ஏற்ற ஒப்புயர்வற்றத் தலைவரும், தமிழ்நாட்டு மக்களால் மிக மதித்துக் கொண்டாடப்படுபவருமான தியாக சீலர் என். சங்கரய்யா அவர்களுக்கு பெருமையுறு முனைவர் பட்டம் வழங்கிச் சிறப்பிக்க மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தின் ஆட்சிக் குழு, ஆட்சி மன்ற உயர்க் குழு ஆகியவை ஒரே மனதுடன் முடிவு செய்தன. பல்கலைக்கழகத்தின் வேந்தர் என்ற முறையில் ஆளுநர் என். ரவி அவர்களின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்ட போது அவர் அதை ஏற்க மறுத்து திருப்பி அனுப்பினார்.

பல்கலைக்கழகத்தின் இரு குழுக்களும் மீண்டும் அத்தீர்மானத்தை நிறைவேற்றி அவருக்கு அனுப்பி வைத்ததோடு துணை வேந்தரும் பதிவாளரும் நேரடியாகச் சென்று ஆளுநரைச் சந்தித்து வேண்டிக்கொண்டனர்.

தமிழக உயர் கல்வி அமைச்சரும் இப்பல்கலைக்கழகத்தின் இணை வேந்தருமான பொன்முடி அவர்கள் இதற்கு ஒப்புதல் அளிக்கும்படி ஒரு முறைக்கு இருமுறை ஆளுநரை வேண்டிக் கொண்டார்.

மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தின் சட்டப்படி பெருமையுறு முனைவர் பட்டமளிக்கும் அதிகாரம் அப்பல்கலைக்கழகத்திற்கே உண்டு. ஆளுநரின் ஒப்புதல் பெற வேண்டிய தேவையில்லை. ஆனால் அப்பட்டத்தில் வேந்தர் என்ற முறையில் ஆளுநர் கையொப்பம் இட வேண்டும். அத்துடன் இப்பட்டத்தினை தியாக சீலர் சங்கரய்யாவுக்கு வழங்கி அவரைப் பெருமைப்படுத்த வேண்டும். ஆனால் தனது பதவிக்குரிய மாண்பினைச் சற்றும் உணராத நிலையில் ஆளுநர் நடந்து கொண்டது அவரது சிந்தனை வறட்சியையும் சிறுமைத்தனத்தையும் அப்பட்டமாக வெளிக்காட்டி மக்கள் முன்னால் அவரை அம்பலப்படுத்திவிட்டது.

தனது செயலுக்கு உரிய காரணம் எதையும் ஆளுநர் இது வரை கூற மறுத்திருப்பது அவரது மமதைக்கு சரியான எடுத்துக்காட்டாகும்.

இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தையும் அதில் ஈடுபட்டு எண்ணற்ற தியாகம் செய்தவர்களையும் ஆர். எஸ். எஸ். அமைப்பு ஒரு போதும் மதித்ததில்லை. இந்திய விடுதலைப் போராட்டத்தில் அவர்களின் பங்களிப்பு எதுவும் கிடையாது. அந்த அமைப்பைச் சேர்ந்த ஆளுநர் ரவியின் தொடர் நடவடிக்கைகள் பலவும் மக்களின் கண்டனத்திற்கு ஆளாகி உள்ளன. ஆளுநரின் அற்பச் செயலின் மூலம் தியாக சீலர் சங்கரய்யா அவர்களின் பெருமை அணு அளவும் குறைந்துவிடவில்லை. திரு. சங்கரய்யா அவர்களுக்கு பெருமையுறு முனைவர் பட்டம் வழங்கப்பட்டிருந்தால் அப்பட்டத்திற்கு மேலும் பெருமை கூடியிருக்கும். அந்தச் சிறப்பினை ஆளுநர் தனது எதேச்சதிகாரப் போக்கின் விளைவாகச் சீர்குலைத்திருப்பதின் மூலம் ஆளுநர் பதவிகள் தேவையற்றவை என்ற கருத்தோட்டத்திற்கு மேலும் வலிமை சேர்த்திருக்கிறார். இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று கூடி அடுத்த தேர்தலுக்கான வாக்குறுதியாக ஆளுநர் பதவியை ஒழிப்பது குறித்து அறிவிக்க வேண்டும்.” என்று நெடுமாறன் கூறியுள்ளார். 

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com