ஆளுநர் ஆர்.என்.ரவி - பொன்முடி
ஆளுநர் ஆர்.என்.ரவி - பொன்முடி

பொன்முடி விவகாரம்- ஆளுநர் ரவிக்கு நாளைவரை கெடு; உச்ச நீதிமன்றம் மீண்டும் கண்டிப்பு!

பொன்முடிக்கு அமைச்சர் பதவிப்பிரமாணம் செய்துவைக்க ஆளுநர் ரவி மறுத்தது தொடர்பாக உச்ச நீதிமன்றம் இன்று   கண்டித்துள்ளது. 

ஏற்கெனவே, மாநில அரசுகளின் அதிகாரம் தொடர்பான பிரச்னையில் உச்ச நீதிமன்றம் இரவியைக் கண்டித்திருந்தது. 

பொன்முடி மீதான தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்திவைத்த பின்னரும், ஆளுநர் இரவி இப்படி நடந்துகொள்வதைத் தீவிரமாக எடுத்துக்கொள்வதாக தலைமை நீதிபதி அமர்வு கடிந்துகொண்டுள்ளது.  

உச்சநீதிமன்றம் குற்றவாளி எனும் தீர்ப்பை நிறுத்திவைத்துவிட்டால் அவர் குற்றவாளி இல்லை என்றே பொருள் என நீதிபதி குறிப்பிட்டார். 

நாளைக்குள் ஆளுநர் சாதகமான பதிலைத் தெரிவிக்காவிட்டால், தாங்களே இதில் தீவிரமான உத்தரவைப் பிறப்பிக்க நேரும் என்று தலைமை நீதிபதி சந்திரசூட் கெடு விதித்து ஆணையிட்டார்.  

முன்னதாக, ஊழல் வழக்கில் கடந்த டிசம்பரில் பொன்முடிக்கும் அவரின் மனைவிக்கும் மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீட்டில் கடந்த 11ஆம் தேதியன்று தண்டனை நிறுத்திவைக்கப்பட்டது. 

அந்தத் தீர்ப்பு கிடைத்ததும் அவரை மீண்டும் அமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்துவைக்குமாறு ஆளுநர் ஆர்.என்.இரவிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் அனுப்பினார். ஆனால், எதுவும் சொல்லாமல் தில்லிக்குப் பறந்த ஆளுநர் இரவி, பின்னர், பொன்முடிக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைக்க முடியாது என விளக்கம் அளித்தார். 

அதை எதிர்த்து, தமிழக அரசுத் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. 

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com