இறுதிச்சடங்கில் துயரம்- மின்னல் தாக்கி 2 பேர் பலி; 15 பேர் படுகாயம்

இறுதிச்சடங்கில் துயரம்- மின்னல் தாக்கி 2 பேர் பலி; 15 பேர் படுகாயம்

முதியவரின் இறுதிச்சடங்குக்காகச் சென்றவர்களை மின்னல் தாக்கியதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

மதுரை-சிவகங்கை மாவட்ட எல்லையில் உள்ள கீரனூர் கிராமத்தைச் சேர்ந்த 70 வயது பெண் நேற்றுமுன்தினம் இறந்துபோனார். அவரின் உடலை அடக்கம்செய்வதற்காக நேற்று மாலை மயானத் துக்கு எடுத்துச்சென்றனர். அப்போது இடியுடன் கன மழை பெய்தது. அதனால் அங்குள்ள மரத்தடியில் மக்கள் ஒதுங்கி நின்றனர். மீண்டும் பெரும் இடியோசையுடன் வந்த மின்னல் தாக்கியதில், கீரனூர் செல்வா (வயது 23), பூவந்தியைச் சேர்ந்த அக்கினிராஜ் (31) ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த பதினைந்துக்கும் மேற்பட்டோர் மதுரை, சிவகங்கை, திருப்புவனம் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் தாதன்கோட்டையைச் சேர்ந்த 27 வயது விஜயலட்சுமி என்பவர், புல் அறுப்பதற்காக தோட்டத்துக்குச் சென்றிருந்தார். அப்போது மின்னல் தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.

இதே மாவட்டத்தில் உள்ள கோட்டையூரைச் சேர்ந்தவர் வேல்முருகன் (35), தன் வீட்டுக்கு அருகே கொட்டகையில் நேற்று மாடுகளைக் கட்டிக்கொண்டிருந்தார். அப்போது அவர் மீது மின்னல் மின்னல் தாக்கியதில், இறந்துபோனார்.

தென்காசி மாவட்டம், தேவிபட்டணத்ச்தை சேர்ந்த மகாலிங்கம். இராணுவத்தில் பணியாற்றி வந்த இவருக்கு வயது 26. விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தவர், நேற்று மாலையில் கொட்டும் மழைக்கு இடையிலும் வயலில் வேலை செய்துகொண்டிருந்தார். அப்போது திடீரென மின்னல் தாக்கியதில் உயிரிழந்தார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com