இஸ்ரேலிலிருந்து தமிழ்நாட்டவர் 21 பேர் ஊர் திரும்பினர்!

இஸ்ரேலிலிருந்து இன்று காலை புதுதில்லிக்கு வந்தடைந்த தமிழ்நாட்டவர் 21 பேர் சொந்த மாநிலத்துக்குத் திரும்பியுள்ளனர்.
இவர்கள் கோயம்புத்தூர், திருவாரூர், கடலூர், திருச்சி, தேனி, கரூர், விருதுநகர், நாமக்கல், புதுக்கோட்டை, காஞ்சிபுரம், சென்னை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.
தில்லியிலிருந்து தமிழக அரசின் சார்பில் இவர்களை பத்திரமாக இங்கு அழைத்துவருவதற்கான பயணச்சீட்டு உட்பட்ட அனைத்து வசதிகளும் செய்துதரப்பட்டன. தனியார் இண்டிகோ நிறுவன விமானத்தின் மூலமாக, சென்னைக்கு 14 பேரும் கோவைக்கு ஏழு பேரும் அழைத்துவரப்பட்டனர்.

சென்னையில் வந்திறங்கியவர்களை அமைச்சர் மா.சுப்பிரமணியனும் அயலகத் தமிழர் நலத்துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் முதலிய அதிகாரிகளும் வரவேற்றனர்.
இதுவரை தமிழக அரசுடன் இஸ்ரேலில் உள்ள 114 பேர் தொடர்பு கொண்டுள்ளனர் என்றும் அவர்கள் படிப்படியாக இந்திய அரசின் மூலம் தில்லிக்கு அழைத்துவரப்பட்டு, அங்கிருந்து தமிழகத்துக்கு கூட்டிவரப்படுவார்கள் என்றும் அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இவர்களில் யாருக்கும் மனநல ஆலோசனை அளிக்கும் தேவை இல்லை என்றும் வந்திருப்பவர்களின் தேவை என்ன என்பதை அறிந்து மேற்கொண்டு அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சர் கூறினார். வடசென்னை மக்களவைத் தொகுதி உறுப்பினர் கலாநிதி வீராசாமியும் உடனிருந்தார்.