ஆர்ப்பாட்டத்தில் டிடிவி தினகரன், ஓபிஎஸ்
ஆர்ப்பாட்டத்தில் டிடிவி தினகரன், ஓபிஎஸ்

“ஈபிஎஸ்-யிடம் இருப்பது குண்டர் படை... டெண்டர் படை…” வெளுத்து வாங்கிய டிடிவி தினகரன்!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விரைந்து விசாரிக்க வலியுறுத்தி, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் தலைமையில் தேனியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஜெயலாலிதாவின் மறைவிற்கு பின் இருவரும் ஒரே மேடையில் இணைந்ததால், இந்த ஆர்ப்பாட்டம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஆர்ப்பாட்டத்தில் ஓபிஎஸ் பேசியதாவது, “தான் ஆட்சிக்கு வந்தால், மூன்றே மாதத்தில் கோடநாடு கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுப்பேன் என ஸ்டாலின் கூறினார். ஆனால், இன்று வரை அது நடக்கவில்லை. இந்த வழக்கு ஆமை வேகத்தில் நடக்கிறது. கோடநாடு கொலையை யார் செய்தார்கள் என்பதை அம்பலப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதே நிலை தொடர்ந்தால் தமிழ்நாடு முழுக்க போராட்டம் வெடிக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பிரச்னையில் தீர்வு வரவேண்டும்.

கோடநாடு பங்களாவிற்கு வழங்கப்பட்டு வந்த தடையில்லா மின்சாரத்தை நிறுத்தியது யார்?" என கேள்வி எழுப்பினார்.

இதனைத் தொடர்ந்து, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்  பேசுகையில்,  “அம்மாவின் தொண்டர்கள் மடியிலே கனம் இல்லாதவர்கள். நெஞ்சிலே வீரம் மிக்கவர்கள். தேனி என்றாலே, எனக்கு இதயம். நான் பிறந்தது தஞ்சை என்றாலும், அரசியலில் என் தாய் மண் தேனி மாவட்டம் தான். ஜெயலலிதா 1999 நாடாளுமன்ற தேர்தலில் என்னை வேட்பாளராக அறிவித்தார். ஓபிஎஸ் அப்போது மாவட்ட இளைஞர் அணி செயலாளராகவும், பெரியகுளம் நகர செயலாளராகவும் இருந்தார்.

அன்றைக்கு நான் அம்மாவின் வேட்பாளராக நான் இங்கு வந்தபோது, அப்போதிருந்த 90% பேர் இப்போதும் நம்முடன் இருக்கிறார்கள்.யாரோ ஒரு சிலர் விலைபோய் இருக்கலாம். ஆனால் எதற்கும் விலை போகாத தொண்டர்கள் எங்கள் பின்னால் நிற்கின்றனர். இங்கு கூடிய கூட்டம் தானாக சேர்ந்த கூட்டம். காசு கொடுத்து கூட்டிய கூட்டம் இல்லை. மதுவுக்காகவும் பிரியாணிக்காகவும் வந்தவர்கள் இல்லை. காந்தி நோட்டுக்காக வந்தவர்கள் இல்லை.

தமிழ்நாட்டின் அனைத்து வருவாய் மாவட்டங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது. கொடநாடு வழக்கில் தொடர்புடையவர்கள் யாரென்று உங்களுக்கு தெரியும்? சாட்சிகள் அழிக்கப்பட்டது எல்லோருக்கும் தெரியும்.

அம்மா அவர்கள் மிகவும் நேசித்து, வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் சென்று தங்கிய கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்திற்கு காரணமானவர்கள் யார் என அம்மாவின் தொண்டர்கள் அனைவருக்கும் தெரியும். தேர்தலுக்கு முன் தேர்தல் அறிக்கையில், ஆட்சிப்பொறுப்பேற்று 90 நாட்களில் கொடநாடு விவகாரத்தில் குற்றவாளிகளை கைது செய்து சிறையிலடைப்போம். அது எவ்வளவு பெரிய கொம்பனாக இருந்தாலும் அவர்களை விட மாட்டோம் என தெரிவித்தனர்.

ஆனால், ஆட்சி பொறுப்பிற்கு வந்து 2 ஆண்டுகள் ஆகியும் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. வழக்கம் போல் இந்த வாக்குறுதியையும் ஸ்டாலின் அவர்கள் மறந்து விட்டார்கள். கோடநாடு விவகாரத்தில் குற்றவாளிகளை கண்டறிந்து உரிய நடவடிவக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, இன்று நாங்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம்.

ஈபிஎஸ்-யிடம் இருப்பது குண்டர் படை, டெண்டர் படை. அவர்களுக்கு தொண்டர்களின் விசுவாசம் என்றால் என்னவென்று தெரியாது. அவர்களுக்கு துரோகத்தை தவிர வேறு எதையும் அறியாதவர்கள். அவர்கள் அச்சாணி முறிந்து போனவர்கள். நாங்கள் இருவரும் இணைந்திருப்பது சுயநலத்திற்காக அல்ல. எங்களது ஒரே எண்ணம் அதிமுக கட்சி மற்றும் சின்னதை துரோகத்தால் அபகரித்ததை மீட்டு தொண்டர்களிடம் கொடுக்க வேண்டும் என்பதே.

கோடநாடு கொலை, கொள்ளை குற்றவாளிகளை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்டாலின் இதை விரைந்து செய்யவேண்டும்” என்றார்.

டிடிவி தினகரன் பேசிக் கொண்டிருக்கும் போதே ஓபிஎஸ் தம்பி, ஓ ராஜா டிடிவி தினகரனுக்கு சால்வை அணிவித்து காலில் விழுந்தார் என்பது குறிப்பிடத்தக்கது!

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com