ஈஷா மைய வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு - சிபிஎம் வரவேற்பு!

isha centre
ஈஷா மையம்
Published on

கோவை ஈஷா யோகா மையத்திற்கு எதிரான வழக்குகளை விசாரிக்க தமிழ்நாடு காவல்துறைக்கு எந்த தடையும் இல்லை என இன்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வரவேற்றுள்ளது.

கோவை வடவள்ளியைச் சேர்ந்தவர் பேராசிரியர் காமராஜ். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது மகள்கள் லதா, கீதா ஆகியோர் ஈஷா யோகா மையத்தில் யோகா கற்கச் சென்றவர்கள் அங்கேயே தங்கி விட்டனர் என்றும், அங்கு அவர்களை மொட்டையடித்து தனி அறையில் அடைத்து துன்புறுத்தல் செய்வதாகவும், தாங்கள் பார்ப்பதற்கு அனுமதி மறுப்பதாகவும், மகள்களை மீட்டுத்தர வேண்டுமென மனுத்தாக்கல் செய்திருந்தார்.

வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஈஷா யோகா மையத்தின் மீதான முறைகேடுகள் குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை தொடுத்தது. அந்த மையத்தின் மீதான மொத்த வழக்குகளையும் ஆய்வு செய்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென காவல்துறைக்கு உத்தரவிட்டது.

ஈஷா யோகா மையம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில் உயர்நீதிமன்ற உத்தரவுக்குத் தடைவிதித்து, வழக்கை உச்சநீதிமன்றத்திற்கு மாற்றுவதாகவும் உத்தரவிட்டது.

இன்று இவ்வழக்கை விசாரித்த  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு, ஈஷா யோகா மையத்தின் மீது நிலுவையில் உள்ள வழக்குகளை சட்டப்படி விசாரிக்க மாநில காவல்துறைக்கு எந்த தடையும் இல்லை விசாரணை தொடரலாம் என்று தீர்ப்பு அளித்தது.

இதை வரவேற்றுள்ள சி.பி.எம். கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ”ஈஷா யோகா மையத்தின் மீது நில அபகரிப்பு, போதைப்பொருள் பயன்படுத்துவது, வளாகத்தில் நடைபெற்ற மர்மமான கொலைகள், பாலியல் வன்முறைகள் என அடுக்கடுக்கான பல்வேறு புகார்கள் ஏற்கனவே பலரால் எழுப்பப்பட்டுள்ளன. இதன் மீதான வலுவான போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.  தற்போது உச்சநீதிமன்றம் ஈஷா யோகா மையத்தின் மீதான புகார்களை விசாரிக்க மாநில அரசிற்கும், காவல்துறைக்கும் தடையில்லை என்று உத்தரவிட்ட பின்னணியில், ஈஷா யோகா மையத்தின் மீதான நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் புலன் விசாரணை செய்திட சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும், இவ்வழக்கினை நேர்மையாகவும் துரிதமாகவும் விசாரித்து உரிய சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை தமிழக அரசும், காவல்துறையும் மேற்கொள்ள வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளார்.  

logo
Andhimazhai
www.andhimazhai.com