காவிரி ஆறு
காவிரி ஆறு

ஒகேனக்கல் உட்பட 4 புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள்

ஒகேனக்கல் இரண்டாம் திட்டம், பெரம்பலூர்,நாமக்கல், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் விவரம்:

“ இந்த ஆண்டில் சுமார் 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தலைசிறந்த அறிவியல் நிறுவனங்களின் வழிகாட்டுதலுடன் மக்கள் பங்களிப்போடு 5,000 நீர்நிலைகளைப் புனரமைக்கும் பெரும் திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும்.

2007 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டு, வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வரும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் 7,890 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.

கொள்ளிடம் ஆற்றினை நீராதாரமாகக் கொண்டு பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் நகராட்சியிலுள்ள சுமார் 65,000 மக்களுக்குத் தேவையான அளவு குடிநீர் வழங்கும் பொருட்டும், பெரம்பலூர் மாவட்டத்தில் எறையூர் மற்றும் பாடலூரில் அமைந்துள்ள சிப்காட் தொழில் வளாகத்திற்குத் தேவையான நீரை வழங்கும்பொருட்டும், ஒரு கூட்டுக் குடிநீர்த் திட்டம் 366 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

காவிரி ஆற்றை நீராதாரமாகக் கொண்டு நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம், எருமப்பட்டி, கபிலர்மலை மற்றும் பரமத்தி ஆகிய 4 ஒன்றியங்களிலுள்ள 216 ஊரகக் குடியிருப்புகளில் வசிக்கும் சுமார் 2 இலட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் ஒரு கூட்டுக் குடிநீர்த் திட்டம் 358 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

வைகை ஆற்றை நீராதாரமாகக் கொண்டு, திண்டுக்கல் மாநகராட்சி, சின்னாளப்பட்டி, சேவுகம்பட்டி பேரூராட்சிகள் மற்றும் ஆத்தூர், நிலக்கோட்டை, வத்தலக்குண்டு ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 425 ஊரகக் குடியிருப்புகளில் வசிக்கும் சுமார் 6 இலட்சம் மக்கள் பயன்பெறும் வகையில், ஒரு புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டம் 565 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறைவேற்றப்படும்.”

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com