ஓய்வுபெற்றவர்க்குத் தரவேண்டியது ரூ.3000 கோடி, தந்ததோ 372 கோடிதான்!

government bus
அரசுப் பேருந்து
Published on

ஓய்வு பெற்ற அரசுப் போக்குவரத்துக் கழகத்  தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய தொகை ரூ.3000 கோடி என்றும் ஆனால் அவர்களுக்காக அரசு இப்போது அறிவித்திருப்பது ரூ.372 கோடிதான் என்றும் யானைப்பசிக்கு சோளப்பொறி போடுவதால் என்ன பயன் என்றும் பா.ம.க.  தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். 


இதுகுறித்து இன்று கருத்து வெளியிட்டுள்ள அவர், “அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பல ஆண்டுகள் பணியாற்றி கடந்த 2022ஆம் ஆண்டு திசம்பர் மாதம் முதல் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான  4 மாதங்களில்  ஓய்வு மற்றும் விருப்ப ஓய்வு பெற்ற   1279  தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்புத் தொகை, ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை உட்பட்ட பணப் பலன்களுக்காக ரூ.372.06 கோடியை ஒதுக்கீடு செய்திருப்பதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இதைச் சாதனையாக தமிழக அரசு காட்டிக் கொண்டாலும் கூட , இது மிகப்பெரிய வேதனை. ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் நலன்களை அரசு பாதுகாக்கத் தவறிவிட்டதையே இது காட்டுகிறது.” என்று குறைகூறியுள்ளார்.

மேலும், ”அரசுப் போக்குவரத்துக்கழகங்களில் பணியாற்றி கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை ஓய்வு பெற்ற பணியாளர்களின்  எண்ணிக்கை ஏறக்குறைய பத்தாயிரம் ஆகும். அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய  ஓய்வுக்கால பயன்களின் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.3,000கோடி ஆகும்.” என்று தெரிவித்துள்ள அன்புமணி,

“ஆனால், கிட்டத்தட்ட எட்டில் ஒரு பங்கு அளவுக்கு அதாவது  1279 தொழிலாளர்களுக்கு மட்டுமே  ரூ.372.06 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்திருக்கிறது. இது யானைப் பசிக்கு சோளப் பொறியைப் போன்றது.”எனக் குறிப்பிட்டுள்ளார்.

”தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள ஓய்வூதியப் பயன்கள் வழங்கப்பட்ட பிறகும் ஏறக்குறைய  எட்டாயிரத்திற்கும் கூடுதலான  ஓய்வூதியர்களுக்கு ரூ.2600 கோடிக்கும் கூடுதலான தொகை  வழங்கப்பட வேண்டியுள்ளது. அவர்களில் பலர் ஓய்வுபெற்று  20 மாதங்களாகிறது. போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றியவர்கள் தங்களுக்கு மொத்தமாகக் கிடைக்கும் ஓய்வுக்கால பயன்களை நம்பித் தான் தங்கள் பிள்ளைகளின் கல்வி, திருமணச் செலவுகளுக்காக  லட்சக்கணக்கில் வட்டிக்குக் கடன் வாங்கியுள்ளனர். ஓய்வுபெற்று 20 மாதங்கள் ஆகியும் ஓய்வுக்கால பயன்கள் கிடைக்காத நிலையில் அவர்கள் தாங்கள் வாங்கிய  கடனுக்கு  வீணாக வட்டி செலுத்திக் கொண்டிருக்கின்றனர். இதற்கு தமிழக அரசு பொறுப்பேற்றுக் கொள்ளுமா?” என அன்புமணி கேட்டுள்ளாஎ.

”2022-ஆம் ஆண்டு திசம்பர் மாதத்துக்கு பிறகு ஓய்வு பெற்றவர்களில் 40%க்கும் கூடுதலானவர்கள்  2003-ஆம் ஆண்டுக்கு பிறகு பணியில் சேர்ந்தவர்கள். அதனால் அவர்களுக்கு ஓய்வூதியம் கூட வழங்கப்படுவதில்லை. ஓய்வுக்கால பயன்கள் வழங்கப்பட்டாலாவது அவர்கள் அதைக் கொண்டு வாழ்க்கை நடத்த முடியும். ஆனால், ஓய்வுக்கால பயன்களும் கிடைக்காமல், ஓய்வூதியமும் இல்லாமல் வறுமையில் வாடிக்கொண்டிருக்கின்றனர்.

உழைப்பவர்களின் வியர்வை காயும் முன்பே அவர்களுக்கான ஊதியத்தை வழங்க வேண்டும் என்ற நபிகள் நாயகத்தின் பொன்மொழியை  ஆண்டுதோறும் மே நாளில் மேற்கொள்காட்டும்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதை செயலில் காட்ட மறுப்பது நீதியல்ல. தீப ஒளி திருநாளை மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் அவர்களுக்கான ஓய்வூதிய பயன்களை  அரசு உடனடியாக வழங்க வேண்டும்.” என்றும் அன்புமணியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com