கன்னியாகுமரியில் வெள்ளம் வந்த இடங்கள்- சி.பி.எம். செயலாளர் சொல்லும் காரணம்!

கன்னியாகுமரியில் வெள்ளம் வந்த இடங்கள்- சி.பி.எம். செயலாளர் சொல்லும் காரணம்!

கேரளத்தில் அமைக்கப்படும் சாலைகள் குறிப்பிட்ட காலத்துக்குள் பழுதடைந்தால் ஒப்பந்ததாரரே பொறுப்பாக்கப்படுவதுபோல கன்னியாகுமரி மாவட்டத்திலும் பொறுப்பாக்கப்பட வேண்டும்; அனைத்து சாலைகளும் உடனடியாக சீரமைக்கப்பட வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட சிபிஎம் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர். செல்லசுவாமி வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:

“ கடந்த 16ஆம்,17ஆம் தேதிகளில் குமரி மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் பல இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. குறிப்பாக நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பாறக்கா மடம், ஊட்டுவாழ்மடம், வசந்த் நகர், மேல் கருப்புகோட்டை, இலுப்படி காலனி, ரயில்வே குடியிருப்பு உட்பட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம் வெளியேறாமல் தேங்கிக் கிடக்கிறது. வீடுகளைவிட்டு வெளியேறி உறவினர் வீடுகளிலும், முற்றிலும் வெள்ளக் காடாக மாறிய பாறக்கல்மடம் மக்கள் வடிவீஸ்வரம் முகாமிலும் தங்கியுள்ளனர்.

வடிகால்களை ஆக்கிரமித்துள்ள மாநக ராட்சியாக மாறியுள்ள (கரியமாணிக்கபுரம் ஊராட்சி) பகுதிகளில் வீட்டுமனைகளுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அத்தகைய நீர்வழி ஆக்கிரமிப்புகளில் மாநகராட்சியே சாலைகளும் அமைத்துள்ளது. இதன் காரணமாக மழை வெள்ளம் வெளியேற வழியின்றி வீடுகளுக்குள் புகுந்துள்ளது. இவற்றை முழுமையாக நேரடி ஆய்வு செய்து உடனடியாக தேங்கியுள்ள வெள்ளத்தை வெளியேற்றவும், ஆக்கிரமிப்புகளை அகற்ற வும், மாவட்டத்தில் மழையால் இடிந்த வீடு களை கட்டித்தரவும் மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாவட்டத்தில் கடந்த 4 மாதங்களாக சற்று இடைவெளிவிட்டு மழை பெய்து வருகிறது. இதனால், விவசாயம், ரப்பர், கட்டுமானம், மீன்பிடித்தல், குடிசைத்தொழில்கள் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மீன வர்களும், சிறு, குறு ரப்பர் விவசாயிகளும் அதை நம்பியுள்ள தொழிலாளர்களும் கடு மையாக பாதிக்கப்பட்டுள்ளனர். முந்திரி தொழில் நலிவுற்ற நிலையில் கட்டுமானம், முறைசாரா தொழில்களை நம்பியிருக்கும் ஏழை எளிய தொழிலாளர்கள் வருவாயின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அத்தியாவசியத் தேவைகளுக்கு வட்டிக்குப் பணம் வாங்கி திருப்பிச்செலுத்த முடியாமல் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்ளும் அதிர்ச்சி அளிக்கும் துயர நிகழ்வுகளும் நடந்து வருகின்றன. எனவே, பாதிப்புகள் குறித்து முழுமையாக ஆய்வுசெய்து அரசின் தலையீட்டையும், உதவியையும் மாவட்ட நிர்வாகம் பெற்றுத்தர வேண்டும். கோதையாறு போன்ற மலைப்பாதைகளும், கிராம சாலைகள் முதல் தேசிய நெடுஞ்சாலைகள்வரையும் சேதமடைந்திருந்த நிலையில் மழையால் படுமோசமான நிலைக்குச் சென்றுள்ளன. கேரளத்தில் அமைக்கப்படும் சாலைகள் குறிப்பிட்ட காலத்துக்குள் பழுதடைந்தால் ஒப்பந்ததாரரே பொறுப்பாக்கப்படுவதுபோல குமரி மாவட்டத்திலும் பொறுப்பாக்கப்பட வேண்டும். அனைத்து சாலைகளும் உடனடியாக சீரமைக்கப்பட வேண்டும்.” என்று கன்னியாகுமரி சிபிஎம் செயலாளரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com