மின்வாரியப் பொறியாளர்களுடன் அமைச்சர் தங்கம் தென்னரசு காணொலிப் பேச்சு
மின்வாரியப் பொறியாளர்களுடன் அமைச்சர் தங்கம் தென்னரசு காணொலிப் பேச்சு

கனமழை ஆரஞ்சு, மஞ்சள் எச்சரிக்கைகள் - மின்வாரிய ஏற்பாடுகள் என்னென்ன?

Published on

சில மாவட்டங்களில் வரும் 6ஆம் தேதிவரை கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், மின்வாரியம் சார்பில் சென்னையில் இன்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை நடைபெற்றது.

அண்ணாசாலையில் உள்ள மின்வாரியத் தலைமை அலுவலகத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு, மின்வாரியத் தலைவர் ராஜேஷ் லக்கானி ஆகியோர் தலைமையில்,

ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களான கோயம்புத்தூர், நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, இராமநாதபுரம்,

மஞ்சள் எச்சரிக்கை விடுத்த மாவட்டங்களான மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, விருதுநகர், திருப்பூர், ஈரோடு, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகியவற்றின் தலைமைப் பொறியாளர்கள், மேற்பார்வை பொறியாளர்கள் கலந்துகொண்டனர்.

முன்னதாக, கடந்த ஜூலை 19ஆம் தேதி முதல் சிறப்புப் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு கடந்த மாதம் 31வரை செய்துமுடிக்கப்பட்டது.

குறிப்பாக 1,348 துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் முடிக்கப்பட்டு சீரான மின் விநியோகத்திற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன; 5,39,780 மரக் கிளைகள் மின் வழித்தடங்களில் இருந்து தமிழகம் முழுவதும் அகற்றப்பட்டு மின் விநியோகத்திற்கான ஏற்பாடுகள் சீர் செய்யப்பட்டிருக்கின்றன;  53,852 பழுதடைந்த மின் கம்பங்கள் புதிதாக மாற்றப்பட்டு இப்பொழுது பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளன; 21 வகையான பராமரிப்பு பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டு 9,95,945 பணிகள் நிறைவு செய்யப்பட்டிருக்கின்றன என்றும்,

தலைநகர் சென்னையில் ஏற்கெனவே தரைமட்டத்தில் இருந்த 4,638  பில்லர் பாக்ஸ்களின் உயரம் ஒரு மீட்டர் அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது; சென்னை முழுவதும் 4,746 இடங்களில் ஆர்.எம்.யு.கள் பொருத்தப்பட்டுள்ளன என்றும் மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேவைப்படும் நிவாரணப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள 3,01,817 மின்கம்பங்கள், 12,600 கி.மீ. மின்கம்பிகள் மற்றும் 18,008 மின்மாற்றிகள் உட்பட அனைத்து தளவாட பொருட்களின் கையிருப்பு நிலை குறித்து அமைச்சர் கேட்டறிந்தார்.

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 176 கோட்டங்களின் செயற்பொறியாளர்களின் கீழ் மின் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கென பிரத்யேகமாக இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டு, ஒரு குழுவிற்கு 15 பணியாளார்கள் வீதம், மொத்தம் 5,000 பேர் 24x7 மணி நேரமும் மின் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் முடிவுசெய்யப்பட்டது.

logo
Andhimazhai
www.andhimazhai.com