கரு சுமக்கும் பெண்களும் இனி கருவறைக்குள்... 3 அர்ச்சகர்கள் குறித்து ஸ்டாலின் பெருமிதம்!

3 பெண் அர்ச்சகர் பயிற்சியாளர்கள்
3 பெண் அர்ச்சகர் பயிற்சியாளர்கள்
Published on

தமிழ்நாட்டில் முதல் முறையாக மூன்று பெண்கள் அர்ச்சகர் பயிற்சி பெற்று சான்றிதழ் பெற்றுள்ளனர். இதையொட்டி அவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்தில்,

”பெண்கள் விமானத்தை இயக்கினாலும், விண்வெளிக்கே சென்று வந்தாலும் அவர்கள் நுழைய முடியாத இடங்களாகக் கோயில் கருவறைகள் இருந்தன. பெண் கடவுளர்களுக்கான கோயில்களிலும் இதுவே நிலையாக இருந்தது. ஆனால், அந்நிலை இனி இல்லை! அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனப் பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை நமது #திராவிடமாடல் ஆட்சி அகற்றியதில், கரு சுமக்கும் பெண்களும் இனிக் கருவறைக்குள்...” என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, நேற்று சென்னையில் இந்து சமயத் துறையின் 98 அர்ச்சகர்களுக்கும், நான்கு ஓதுவார்களுக்கும் பயிற்சி நிறைவுச் சான்றிதழ் அளிக்கப்பட்டது. அதில், கிருஷ்ணவேணி, ரம்யா, ரஞ்சிதா ஆகிய மூவர் முதல் முறையாக அர்ச்சகர் பயிற்சியை நிறைவுசெய்த பெண்களாக முக்கிய இடம் பிடித்தனர்.

இவர்களில் ரம்யா முதுநிலைப் பட்டம் முடித்தவர். கிருஷ்ணவேணி இயற்பியலிலும், ரஞ்சிதா காட்சி ஊடகவியலில் இளநிலைப் பட்டம் பெற்றுள்ளனர்.

அரசுப் பணி ஒதுக்கீட்டில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டின்படி இவர்களுக்கு உடனடியாக நியமனம் வழங்கவேண்டும் என்று சில தரப்பினர் கோரிக்கையை வைக்கத் தொடங்கியுள்ளனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com