கள்ளச்சாராயம் விற்றால் குண்டர் சட்டம் பாயும்: முதல்வர் உத்தரவு
தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் விற்பனை செய்தால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருட்களை தொடர்ந்து விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் சட்டத்தில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மாநில அளவில் மதுவிலக்கு தொடர்பாக தகவல் அளிப்பதற்கு, கட்டணமில்லா தொலைபேசி எண் பயன்பாட்டில் உள்ளதை பொதுமக்கள் இடையே பிரபலப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர், துணைக் காவல் கண்காணிப்பாளர், மதுவிலக்கு அமலாக்கத்துறை அதிகாரி ஆகியோரின் வாட்ஸ் ஆப் எண்களை அறிவித்து, அதன் மூலம் புகார்களை பெற வழிவகை செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் பெறப்படும் புகார்களை மதுவிலக்கு காவல்துறை இயக்குநர் கண்காணித்து, ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை முதலமைச்சர் அலுவலகத்திற்கு அறிக்கை அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
இவை மட்டுமின்றி கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களை அந்தத் தொழிலில் இருந்து விடுவித்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆணையிடப்பட்டுள்ளது . காவல்துறை அலுவலர்கள் தங்களின் முழு திறமையையும், நீண்ட அனுபவத்தையும் பயன்படுத்தி பொதுமக்களின் நன்மதிப்பை பெறும் வகையில் சிறப்பாகச் செயல்பட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.