கவிஞர் தமிழ் ஒளிக்கு தமிழ்ப் பல்கலை.யில் சிலை - அரசு அறிவிப்பு!

கவிஞர் தமிழ் ஒளி
கவிஞர் தமிழ் ஒளிநன்றி: ஓவியர் புகழேந்தி
Published on

கவிஞர் தமிழ் ஒளியின் நூற்றாண்டை முன்னிட்டு தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அவருக்கு சிலை அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார்.

மேலும், பள்ளி மாணவர்களின் தமிழ் ஆர்வத்தினை ஊக்குவிக்கும் வகையில், மாணவர்களுக்கு தமிழ்சார்ந்த போட்டிகள் நடத்தி  கவிஞர் தமிழ் ஒளி பெயரில் பரிசுகள் வழங்க 50 இலட்சம் ரூபாய் வைப்புத்தொகையாக  வைக்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழாக் குழுவினர்  அவரின் பிறந்த நாள் நூற்றாண்டை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வைத்தனர். அதையடுத்து, கவிஞருக்கு மார்பளவு சிலையை வைக்க முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கவிஞரைப் பற்றி அரசு வெளியிட்ட குறிப்பு:

கவிஞர் தமிழ்ஒளி  செப்டம்பர் 29, 1924-ஆம் ஆண்டு குறிஞ்சிப்பாடியை  அடுத்த ஆடூர் என்னும் கிராமத்தில் பிறந்தார்.  விசயரங்கம்  என்பது தமிழ்ஒளியின் இயற்பெயர் ஆகும். பாரதியாரின்  வழித்தோன்றலாகவும்  பாரதிதாசனின்  மாணவராகவும்  விளங்கி கவிதைகளைப் படைத்தவர்.  கவிதைகள் மட்டுமல்லாது கதைகள், கட்டுரைகள், இலக்கியத் திறனாய்வுகள், மேடை நாடகங்கள், குழந்தைப் பாடல்கள் எனப் பல இயற்றியவர்.  தாழ்த்தப்பட்ட மக்களின் இழிநிலை கண்டு, அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளையும் சமூகத்தில் நிலவும் சாதிய வேறுபாடுகளையும் சாடி கவிதைகள் எழுதியவர்.

தமிழ்ஒளியின் கவிதைகள் தனித் தன்மை வாய்ந்தவை. தொடக்கக் காலத்தில் திராவிடர் கழகத்தைச் சார்ந்தவராக இருந்தபோதிலும் பொதுவுடைமைக் கொள்கைகளை உயிர் மூச்சாகக் கொண்டிருந்தார். உலகத் தொழிலாளர்களின் உரிமை நாளான மே தினத்தை வரவேற்றுப் பாடினார். தமிழ்ஒளியின் சிறுகதைகளில் வரும் பாத்திரங்கள் பெரும்பாலோர், ஒடுக்கப்பட்டவர்கள், தொழிலாளர்கள், போராளிகள் என அடித்தட்டு மக்களாகவே இருந்தார்கள்.  இடதுசாரி  சிந்தனையுள்ள தமது படைப்பாக்கங்களில் கவிஞர் தமிழ்ஒளி சாதியத்தையும் விளிம்புநிலை மக்களின் விடுதலையையும் பாடினார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலும் உறுப்பினராக இருந்தார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com