கூட்டுறவு ஊழியர்க்கு மட்டும் 10% போனஸ்தானா?- எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
தமிழ் நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கு 20 சதவீதம் போனஸ், கருணைத் தொகையை வழங்க அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு மட்டும் 10 சதவீதம் மட்டுமே வழங்கப்படும் என்று திமுக அரசு அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
”மாநில அரசின் வேளாண் நலத் திட்டங்கள் அனைத்தும் கூட்டுறவுத் துறை மூலமே தமிழக விவசாயிகளைச் சென்றடைகிறது. மேலும், கூட்டுறவுத் துறையைப் பொறுத்தவரை தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகை அந்தந்த வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் நிதியில் இருந்துதான் ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது. அரசின் நிதியில் இருந்து போனஸ் வழங்கப்படுவதில்லை.
கடந்த பல ஆண்டுகளாக, அனைத்து கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் லாபத்தில் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களுக்கும் 20 சதவீத தீபாவளி போனஸ் மற்றும் கருணைத் தொகையாக அறிவித்துவிட்டு, கூட்டுறவுத் துறைக்கு மட்டும் 10 சதவீதம் மட்டுமே அறிவித்துள்ளதைப் பார்க்கும்போது, ஒரு கண்ணில் கண்ணாம்பும், மறு கண்ணில் வெண்ணெயுமாக நிர்வாகத் திறனற்ற முதலமைச்சர் செயல்படுகிறாரோ என்ற சந்தேகம் எழுகிறது.” என்று அறிக்கை ஒன்றில் பழனிசாமி கூறியுள்ளார்.
மேலும், 11.2021 முதல் ஏற்படுத்தப்பட வேண்டிய அனைத்து மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கப் பணியாளர்களின் ஊதிய உயர்வு ஒப்பந்தம், கடந்த 34 மாதங்களாக நடைமுறைப்படுத்தப்படாமல் திமுக அரசு காலதாமதம் செய்துவருவது கூட்டுறவுத் துறை ஊழியர்களிடையே பெரும் ஏமாற்றத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உடனடியாக கூட்டுறவு வங்கிப் பணியாளர்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 2023-ஆம் ஆண்டுக்கான தீபாவளி போனஸ்- கருணைத் தொகையை 20 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும்; 20 சதவீத ஊதிய உயர்வுக்கு குறையாமல் புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தி நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.