சேலம் பெரியார் பல்கலைக்கழகம்
சேலம் பெரியார் பல்கலைக்கழகம்

’கூறுபோட்டு விற்கப்படும் பெரியார் பல்கலை. : வேடிக்கை பார்க்கப்போகிறதா தமிழக அரசு?’

தமிழக அரசையும், உயர்கல்வித்துறையையும் எள் முனையளவுக்குக் கூட மதிக்காமல் தன்னிச்சையாக செயல்பட்டு வரும் சேலம் பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர், அவரது கூட்டாளிகள் சிலருடன் இணைந்து பெரியார் பல்கலைக்கழகத்தின் சார்பில் கல்வி வழங்குவதற்காக தனி நிறுவனம் ஒன்றைத் தொடங்கியுள்ளார். பெரியார் பல்கலைக்கழகத்தை கூறு போட்டு விற்பனை செய்வதற்கு சமமான இந்த நடவடிக்கை குறித்து தமிழக அரசுக்கு தெரியும் என்ற போதிலும், அதற்கு காரணமானவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பல வாரங்களாக வேடிக்கை பார்த்து வருவது கண்டிக்கத்தக்கதாகும் என்று பா.ம.க. நிறுவனர் இராமதாசு கூறியுள்ளார். 

இந்தப் பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக தொடர்ச்சியாக இராமதாசு கேள்விகளை எழுப்பிவருகிறார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கை விவரம்:

”சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் போன்ற மிகவும் பின்தங்கிய பகுதி மக்களுக்கு உயர்கல்வி வழங்குவதற்காக சேலத்தில் பெரியார் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. ஆனால், கல்வி வளர்ச்சிக்காக ஆக்கப்பூர்வமாக எதையும் செய்யாத பெரியார் பல்கலைக்கழகத்தில் ஊழல்கள் தான் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கின்றன. அதன் அடுத்தக்கட்டமாக பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெகநாதன், பொறுப்பு பதிவாளர் தங்கவேல், கணினி அறிவியல் துறை இணைப் பேராசிரியர் சதீஸ், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர் ராம் கணேஷ் ஆகிய நால்வரும் இணைந்து பூட்டர் அறக்கட்டளை (Periyar University Technology entrepreneurship and Research Foundation) என்ற கல்வி நிறுவனத்தைத் தொடங்கியுள்ளனர். இது தவிர தங்கவேல் உள்ளிட்ட மூவர் இணைந்து அப்டெக்கான் ஃபோரம் என்ற இன்னொரு அமைப்பை உருவாக்கியுள்ளனர். இவர்கள் பெரியார் பல்கலைக்கழகத்தின் பிரதிநிதிகளாக இருந்து, பல்கலைக்கழகத்தின் துணை அமைப்புகளாக அவற்றைத் தொடங்கவில்லை. மாறாக, தங்களை இயக்குநர்களாகக் கொண்டு, பல்கலைக்கழகத்தைவிட அதிக வருவாய் ஈட்டும் நிறுவனங்களாகவே தொடங்கியுள்ளனர். அதுமட்டுமின்றி, இந்த நிறுவனங்களால் பெரியார் பல்கலைகழகம் பாதிக்கப்படும்.

பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதன், பொறுப்பு பதிவாளர் தங்கவேல், கணினி அறிவியல் துறை இணைப் பேராசிரியர் சதீஸ் ஆகிய மூவரும் பெரியார் பல்கலைக்கழக சட்டப்பிரிவு 19இன்படி பொது ஊழியர்களாகக் கருதப்படுவார்கள். அவர்கள் புதிதாக எந்தத் தொழிலையும் தொடங்க முடியாது; தனியார் நிறுவனம் தொடங்குவதாக இருந்தாலோ அல்லது அதில் முதலீடு செய்ய வேண்டும் என்றாலோ அதற்கு பல்கலைக்கழக அனுமதியும், தமிழக அரசின் அனுமதியும் பெற வேண்டும். ஆனால், எந்த அனுமதியும் பெறாமல் நிறுவனங்களைத் தொடங்கியுள்ள இவர்கள், அதற்காக தங்களின் சொந்தப் பணத்தை முதலீடு செய்துள்ளனர். இந்த இரு நிறுவனங்களும் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து செயல்படும்; அதில் கிடைக்கும் லாபத்தை பல்கலைக்கழகத்திற்கு தராமல் துணைவேந்தர் உட்பட்டவர்களே எடுத்துக் கொள்வார்கள். அவர்கள் ஓய்வு பெற்ற பிறகும் இதே நிலை தொடரும்.

இரு புதிய நிறுவனங்களில் பூட்டர் அறக்கட்டளையும், பெரியார் பல்கலைக்கழகமும் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் குழு ஒப்புதலுக்காகவும் அந்த ஒப்பந்தம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பெரியார் பல்கலைக்கழகத்தின் சார்பில் தொழில்நுட்பம், தொழில்முனைவு போன்ற படிப்புகளை பூட்டர் அறக்கட்டளை நடத்தும்; அதற்காக பெரியார் பல்கலைக்கழகத்தின் கட்டமைப்புகளை பயன்படுத்திக் கொள்ளும். அதேநேரத்தில் பெரியார் பல்கலைக்கழகம் வழக்கமாக வசூலிக்கும் கட்டணத்தை விட பல மடங்கு அதிக கட்டணத்தை வசூல் செய்யும் பூட்டர் அறக்கட்டளை, அந்த வருவாயில் ஒரு சிறிய பங்கை மட்டும் பல்கலைக்கழகத்திற்கு கொடுக்கும். பூட்டர் அறக்கட்டளை லட்சக்கணக்கில் கட்டணம் வசூலித்தாலும், இட ஒதுக்கீட்டை மதிக்காமல் மாணவர் சேர்க்கை நடத்தினாலும் அதுபற்றி பல்கலைக்கழகத்தால் வினா எழுப்ப முடியாது.

சுருக்கமாக கூற வேண்டுமானால், பெரியார் பல்கலைக்கழகத்தை அதன் துணைவேந்தரும், கூட்டாளிகளும் கூறு போட்டு விற்றுக் கொண்டிருக்கின்றனர்; பெரியார் பல்கலைக்கழகத்திற்கு கிடைக்க வேண்டிய வருமானத்தை உறிஞ்சிக் கொண்டிருக்கின்றனர். பல்கலைக்கழகத்தில் பணியாற்றிக் கொண்டே, அதில் புதிய நிறுவனத்தை தொடங்குவது சட்டவிரோதம். இதற்காகவே துணைவேந்தர் உள்ளிட்டோர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால், அரசு அதை செய்யாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

பெரியார் பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகளாக ஊழல்கள் தடையின்றி நடைபெற்றுக் கொண்டுள்ளன. அவற்றை பல முறை அறிக்கைகள் மூலம் நான் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளேன். ஆனால், அவற்றின் மீது தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த 13 வகையான முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த கடந்த ஜனவரி 9&ஆம் நாள் உயர்நிலைகுழுவை அரசு அமைத்தது. அந்தக்குழு இரு வாரங்களில் விசாரணை நடத்தி அரக்கு அறிக்கை தாக்கல் செய்திருக்க வேண்டும். ஆனால், அடுத்த ஜனவரி மாதமே வரவிருக்கும் நிலையில் அந்த விசாரணை முடிந்து அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. இத்தகைய அணுகுமுறைகள் காரணமாக தமிழக அரசை பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தரும் அவரது கூட்டாளிகளும் மதிப்பதே கிடையாது.

இனியும் நிலைமை மோசமடையாமல் தடுக்க, பெரியார் பல்கலைக்கழகத்தின் அதன் துணைவேந்தரும், அவரது கூட்டாளிகளும் தனி நிறுவனம் தொடங்கியிருப்பது குறித்து அரசு விசாரணை நடத்த வேண்டும். விசாரணை செம்மையாக நடைபெறுவதை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட அனைவரையும் பணி நீக்க வேண்டும். கடந்தகாலத்தில் நடந்த பல்வேறு முறைகேடுகள் குறித்த வழக்கு விசாரணைகளை விரைவு படுத்தி, தவறு செய்த அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனை பெற்றுத் தா வேண்டும்.” என்று இராமதாசு கூறியுள்ளார். 

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com