சுப உதயகுமாரன், பச்சைத் தமிழகம் கட்சித் தலைவர்
சுப உதயகுமாரன், பச்சைத் தமிழகம் கட்சித் தலைவர்

கோர்ட் சொல்லியும் இப்படி செய்றாங்களே... சுப. உதயகுமாரன் வேதனை!

உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் அதற்கு மாறாக தன் மீது அடக்குமுறை ஏவப்ப்டுவதாக பச்சைத் தமிழகம் கட்சியின் தலைவர் சுப. உதயகுமாரன் பல சம்பவங்களை விவரித்துள்ளார். 

அடக்குமுறைக்குள்ளாகும் ஒரு தமிழனின் அபயக்குரல் என்கிற தலைப்பில் அவர் தன் சமூக ஊடகப் பக்கங்களில் இதுபற்றி எழுதியிருப்பதாவது:

" வணக்கம். நேற்று (யூன் 20, 2024) மாலை 4 மணிக்கு நாகர்கோவிலில் என்னுடைய வீட்டில் வைத்து ஒரு கூட்டம் நடத்தினோம்.

குமரி மாவட்டத்தின் இயற்கை வளங்களைப் பாதுகாப்பது பற்றியும்; குமரியின் அரசியல் மற்றும் இலக்கிய ஆளுமைகளை இளைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்துவது பற்றியும்; நீட் தேர்வை எதிர்ப்பது பற்றியும்; குமரி மாவட்டம் எங்கும் மரங்கள் நடுவது பற்றியும் கூட்டத்தில் கலந்துகொண்ட பதினொரு தோழர்களும் கலந்தாலோசித்தோம்.

இந்த கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள் யாவும் அப்படியே முழுமையாக உளவுத்துறையிடம் ஒப்பிக்கப்பட்டிருக்கின்றன. ஏதோ உலகமகா தீவிரவாதக் குழுவை கண்காணிப்பது போல கண்காணித்து, ஓர் உளவுத்துறை அதிகாரி நேற்று இரவோடு இரவாக கூட்டத்தில் கலந்துகொண்ட ஒரு தோழர் வீட்டுக்குப் போய் விசாரித்து தகவல்கள் பெற்றிருக்கிறார்.

அந்த தம்பி உடனடியாக எனக்கு தகவல் தந்தார். என் வீட்டருகேயுள்ள ஒரு கடைக்காரர் கூட்டத்துக்கு எத்தனை பேர் வந்தார்கள், யார் யார் வந்தார்கள் என்கிற தகவலை அவருக்குச் சொன்னதாக அந்த அதிகாரி தம்பியிடம் தெரிவித்திருக்கிறார். இதே அதிகாரி சில ஆண்டுகளுக்கு முன்னால் தன்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவரை பச்சைத் தமிழகம் கட்சியில் சேர வைத்து அவர் மூலம் தகவல் சேகரித்து வந்தார். இதைக் கண்டுபிடித்து அந்த நபரை நாங்கள் கட்சியில் இருந்து நீக்கினோம்.

இப்போது இந்த அதிகாரியும், கூட்டாளிகளும் என் மீதான வன்மத்தோடும், வெறுப்போடும் என்னைப் பின்தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். என் வீட்டைச் சுற்றி ஒற்றர்களை நியமித்திருக்கிறார்கள். இன்று (யூன் 21, 2024) மாலை மேற்படி அதிகாரி நேற்றையக் கூட்டத்தில் கலந்துகொண்ட இன்னொரு தோழர் வீட்டுக்குப் போய் விசாரித்திருக்கிறார்.

என்னுடைய வீடு கண்காணிக்கப்படுகிறது. நான் வேவு பார்க்கப்படுகிறேன். என்னுடைய கைப்பேசி ஒட்டுக் கேட்கப்படுகிறது. என்னுடைய தனிமையும், சுதந்திரமும் மீறப்படுகின்றன. நான் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறேன்.

நான் நாளை (யூன் 22, 2024) சாத்தான்குளம் ஊரில் நடைபெறவிருக்கும் ஐயா ஜெயராஜ் -- தம்பி பெனிக்ஸ் ஆகியோரின் நான்காவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுக்குப் போவதுகூட உளவுத்துறைக்குத் தெரிந்திருக்கலாம்.

இன்னொரு விடயம்; என் மீதான "தேடப்படும் நபர்" எனும் சுற்றறிக்கையை நீக்கச் சொல்லி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்ட பிறகும், தமிழக காவல்துறையும், நெல்லை மாவட்ட காவல்துறையும் அதனை நீக்க மறுக்கிறார்கள். என்னுடைய பயணம் செய்யும் அடிப்படை உரிமையை மறுக்கும் நோக்கோடு, திட்டமிட்டு காலதாமதம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

மற்றொரு விடயம்; சகட்டு மேனிக்கு மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தும், சாராய ஆலைகள் நடத்திச் சம்பாதித்தும், எழை மக்கள் வயிற்றில் அடித்தும், பல அரசியல்வாதிகள் சிற்றரசர்கள் போல வாழும் இன்பத் தமிழ்நாட்டில், நான் மாபெரும் பொருளாதாரக் குற்றம் இழைத்தவன் என்பது போலப் பாவித்து, சிபிசிஐடி எனக்கெதிரான ஒரு வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருக்கிறார்கள்.

தமிழ்நாடு காவல்துறை மக்களுக்கானத் துறையாக இயங்கவில்லை. அது ஆட்சியாளர்களின் அடியாள் கூட்டமாக இயங்குகிறது. இதற்குள்ளே ஒரு பெரும் காவிக்கூட்டமும் ஊடுருவி இருக்கிறது. இவர்கள் தொடர்ந்து என் போன்றோரை தனிமைப்படுத்த முயற்சிக்கிறார்கள். பொருளாதார ரீதியில் முடக்குகிறார்கள். அச்சுறுத்துகிறார்கள். இது பற்றியெல்லாம் நான் தொடர்ந்து பேசியும், எழுதியும் வருகிறேன். மாநில அரசோ, ஆளும் கட்சியான திமுகவோ இதனைக் கண்டுகொள்வதில்லை.

என்னுடைய அடிப்படை மனித உரிமைகள் திட்டமிட்டு மீறப்படுகின்றன. ஒரு சில காவல்துறை, உளவுத்துறை அதிகாரிகளால் என்னுடைய உயிருக்கும் ஆபத்து எழலாம் என்கிற நிலைமை உருவாகிக் கொண்டிருக்கிறது.

கள்ளச்சாராயத்தால் ஏழை தமிழ் மக்கள் கூட்டம் கூட்டமாகச் சாகும் நிலையில், தங்குத் தடையின்றி தமிழ்நாடு முழுவதும் கிடைக்கும் போதைப் பொருட்களால் தமிழ் இளைஞர்கள் மொத்தமாக அழிந்து கொண்டிருக்கும் நிலையில், சுப. உதயகுமாரன் என்கிற ஒரு தனி நபரின் உயிருக்கும், உரிமைகளுக்கும் இங்கே பெரிய முக்கியத்துவம் எதுவும் கிடைத்துவிடாது என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.

பதினான்கு ஆண்டுகால அச்சுறுத்தல்களும், அடக்குமுறைகளும், தனிமைப்படுத்தலும், தளைப்படுத்தலும் என்னுடைய உறுதியை எள்ளளவும் அசைக்கவில்லை. இவற்றிலிருந்து வருங்காலமும், வருங்கால நிகழ்வுகளும் என்னை விடுவிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.

எனவே இறுதிவரை போராடிச் சாவேனே தவிர, யாரைக் கண்டும் அஞ்சியோ, யாருக்கும் அடிபணிந்தோ சாகமாட்டேன் என்பதை மட்டும் உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று உதயகுமாரன் கூறியுள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com