சூர்யமூர்த்தி- மாதேஸ்வரன்
சூர்யமூர்த்தி- மாதேஸ்வரன்

தி.மு.க. கூட்டணி வேட்பாளர் அதிரடி மாற்றம் - சர்ச்சைப் பேச்சு... பல தரப்பும் எதிர்ப்பு!

நாமக்கல் மக்களவைத் தொகுதியில் தி.மு.க. கூட்டணியின் சார்பில் அறிவிக்கப்பட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளார். ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட சூர்யமூர்த்திக்குப் பதிலாக மாதேஸ்வரன் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

தி.மு.க. கூட்டணியில் நாமக்கல் தொகுதி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அந்தக் கட்சியின் சார்பாக சூரியமூர்த்தி என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார்.

அதையடுத்து, அவர் 5 ஆண்டுகளுக்கு முன்னர் பேசிய காணொலிகள் சமூக ஊடகங்களில் தீயாய்ப் பரவின. குறிப்பாக, ஒரு காணொலியில், கொலைவெறியைத் தூண்டுவதாகவும் சிறையில் உள்ள கைதிகளை வைத்து ஏதோ பயங்கரத்தை நிகழ்த்தப்போவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பட்டியல் சமூகத்தினருக்கு எதிராக அவர் பேசிய வன்முறையைத் தூண்டும் சர்ச்சைக் கருத்துகள் பழையதுதான் என்றாலும், சமூக ஊடகங்களில் பரவியதால், பரபரப்பை உண்டாக்கியது. இதனால், தி.மு.க.வை ஆதரிக்கும் சமூக நீதி அமைப்புகளும், மேற்கு தமிழ்நாட்டின் அருந்ததியர் அமைப்புகளும் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தின.

ஈரோட்டில் நேற்று நடைபெற்ற திராவிடர் விடுதலைக் கழக செயலவைக் கூட்டத்தில், சூர்யமூர்த்தியை மாற்றவேண்டும் இல்லாவிட்டால் அவரைப் புறக்கணித்து பிரச்சாரம் செய்யப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன், தற்போதைய எம்.பி. சின்ராஜ் ஆகியோர் கட்சி நிர்வாகிகளுடன் நேற்றிரவு ஆலோசனை நடத்தினர். அதில், சூரியமூர்த்திக்குப் பதிலாக அக்கட்சியின் நாமக்கல் தெற்கு மாவட்டச் செயலாளர் மாதேஸ்வரனை வேட்பாளராக நிறுத்துவது என முடிவெடுக்கப்பட்டு, அவரின் பெயரும் அறிவிக்கப்பட்டது.

logo
Andhimazhai
www.andhimazhai.com