சர்ச்சையாக்கிய அண்ணாமலை - ஸ்ரீமுஷ்ணம் வழக்கில் 4 பேர் மீது வன்கொடுமை சட்டம்!

அண்ணாமலை
அண்ணாமலை
Published on

பா.ஜ.க. மாநிலத்தலைவர் அண்ணாமலை சர்ச்சையாகப் பேசிய கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் வழக்கில் 4 பேர் மீது பெண்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட விளக்கம்:

“ கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தை சேர்ந்த ஜெயகுமார் (47-வன்னியர்) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் (அதே ஊரைச் சேர்ந்தவர்) மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி, ஜெயகுமாரைத் தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவைக் கேலிசெய்ததைத் தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக மற்றொருபுறமும் வாய்ச்சண்டையும் தாக்கியும் கொண்டுள்ளனர்.

இந்தத் தகராறில், இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ள, கோமதி (ஜெயக்குமாரின் மனைவி) தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயன்றபோது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது.

கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

மேலும் ஜெயகுமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்து காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர்.

இது தொடர்பாக ஜெயகுமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து ஸ்ரீமுஷ்னம் காவல் நிலைய குற்ற எண். 96/2024 ச/பி 147, 148, 294(b), 323, 324, 506(ii) & 302 இ.த.ச மற்றும் பிரிவு 4 பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேற்படி இவ்வழக்கில் 11 கண்ணுற்ற சாட்சிகளையும் 5 ஊர்காரர்கள்/சந்தர்ப்ப சாட்சிகளையும் விசாரித்து வாக்குமூலம் பதிவு செய்தும் மேற்கண்ட முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள 10 பேரில் கலைமணி, ரவி, அறிவுமணி, மேகநாதன் மற்றும் தீபா ஆகியோரை 20.04.2024 பிற்பகல் கைது செய்தும் சம்பவத்தில் பயன்படுத்திய சவுக்கு தடிகளை கைப்பற்றியும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டது.

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளை கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயகுமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது.

இது தவிர வேறு எந்த காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் மூன்று பேர் பாண்டியன், அருள்செழியன் மற்றும் ராஜா ஆகியோர் இன்று (23.04.2024) கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்தாரே தங்களது புகாரில் கடந்த 2021ஆம் ஆண்டு பதியப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவது குறித்த தகராறு தான் கோமதியின் இறப்பிற்குக் காரணம் என தெரிவித்துள்ளார்கள். முதற்கட்ட விசாரணையிலும் இதுவே உண்மை என புலனாகிறது. மேலும் எஞ்சிய 2 பேரை கைது செய்தும் காயம் அடைந்தவருக்கான காயச்சான்றிதழ் பெற்றும் இறப்பிற்காக காரணம் குறித்த மருத்துவ அறிக்கை பெற்றும் அனுமதிக்கப்பட்ட புலன் விசாரணை காலத்திற்குள் இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.” என்று அரசுச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com