அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சாமியாருக்கு எதிராக வழக்கு, போராட்டம் வேண்டாம்! - தி.மு.க.வினருக்கு உதயநிதி வேண்டுகோள்!!

சாமியார் மீது வழக்கு போடுவது, உருவ பொம்மை எரிப்பது போன்ற விவகாரங்களில் நேரத்த வீணடிக்க வேண்டாம் என்று தி.மு.க.வினருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள நீண்ட அறிக்கையில்; “கடந்த மாதம் 20ஆம் தேதி மதுரையில் அ.தி.மு.க. மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் அக்கட்சியின் கொள்கை குறித்தோ, தமிழ்நாட்டின் நலன் குறித்தோ எதாவது பேசப்பட்டதா? விவாதிக்கப்பட்டதா? ஒரு மாநாடு எப்படி நடத்தக்கூடாது என்பதற்கான உதாரணம்தான் அந்த மாநாடு. ” என்று கூறியுள்ளார், சனாதன ஒழிப்பு மாநாட்டில் தான் பேசியது எப்படி திரித்து கூறப்பட்டது என்பதை கூறியுள்ளார்.

மேலும், “அமித்ஷா போன்ற ஒன்றிய அரசின் அமைச்சர்கள், பா.ஜ.க. ஆளும் மாநில முதலமைச்சர்கள் என யார்யாரோ இந்த அவதூறை மையமாக வைத்து என் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர். நியாயமாகப் பார்த்தால், மதிப்புக்குரிய பொறுப்பில் இருந்துகொண்டு அவதூறு பரப்பும் இவர்கள் மீது நான்தான் கிரிமினல் வழக்கு, நீதிமன்ற வழக்குகளைத் தொடுக்க வேண்டும். ஆனால், இவர்களுக்குப் பிழைப்பே இதுதான், இதைவிட்டால், பிழைப்பதற்கு அவர்களுக்கு வேறு வழி தெரியாது என்பதால், 'பிழைத்துப் போகட்டும்' என்று விட்டுவிட்டேன். நாங்கள் எந்த மதத்துக்கும் எதிரி இல்லை என்பதை அனைவரும் அறிவார்கள்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதை கற்பிக்கும் அனைத்தையும் நாங்கள் மதிக்கிறோம். ஆனால், இவை எதையும் புரிந்துகொள்ள விரும்பாமல், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெறும் அவதூறை மட்டுமே நம்பி களமிறங்கியுள்ள மோடி அண்ட் கோவை பார்க்கும்போது ஒரு பக்கம் பரிதாபமாகவும் இருக்கிறது. 'சும்மா இருக்கிறதுன்னா சும்மாவா' என திரைப்பட நடிகர் அண்ணன் வடிவேலு அவர்கள் ஏற்று நடித்த கதாபாத்திரத்திடம் போட்டிப் போடும் அளவுக்கு மோடி அவர்கள் கடந்த 9 ஆண்டுகளாக சும்மாவே இருந்துள்ளார். இடையிடையே பணத்தை மதிப்பிழக்கச் செய்வது, குடிசைகளை மறைத்து சுவர் எழுப்புவது, புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டுவது, அங்கு செங்கோல் நடுவது. நாட்டின் பெயரை மாற்றி விளையாடுவது, எல்லையில் நின்றபடி வெள்ளைக்கொடிக்கு வேலை வைப்பது... என வடிவேலு அண்ணாளின் 23-ஆம் புலிகேசி கதாபாத்திரத்தோடு போட்டிப்போட்டு நகைச்சுவை செய்துகொண்டுள்ளார்” என்றும் உதயநிதி கிண்டலடித்துள்ளார்.

“‘சனாதனம் என்றால் என்ன' என்பதை வீட்டினுள் பத்திரமாக அடுக்கிவைத்திருக்கும் புத்தகங்களில் இருந்து தேடிக்கொண்டிருக்கும் எடப்பாடி அவர்களே. கொடநாடு கொலை- கொள்ளை வழக்குகளிலும், ஊழல் வழக்குகளில் இருந்தும் தப்பிக்க, நீங்கள் ஆட்டுத் தாடிக்குப்பின் நீண்டநாள் ஒளிந்திருக்க முடியாது. ஆடு ஒருநாள் காணாமல் போகும்போது, நீங்கள் என்ன ஆகப்போகிறீர்கள் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

ஒரே நாடு ஒரே தேர்தல்... நடத்திடுவோம் எஜமான்', 'பாரதம்னு மாத்துறீங்களா... மாத்திடுங்க ஓனர்' என்று மோடியின் நாடகத்தையே இங்கே அரங்கேற்றிக்கொண்டு இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்.

சாமியார்களுக்குத்தான் இந்தக் காலத்தில் அதிக விளம்பரம் தேவைப்படுகிறது. அப்படி ஒரு சாமியார் இடையில் புகுந்து என் தலைக்கு 10 கோடி ரூபாய் விலை வைத்துள்ளார். என் தலையைவிட 'முற்றும் துறந்தவரிடம் எப்படி 10 கோடி' என்பதுதான் எனக்கு வியப்பாக இருக்கிறது. தவிர பலர் என் மீது நாட்டின் பல்வேறு காவல் நிலையங்களிலும், மாண்பமை நீதிமன்றங்களிலும் புகார் அளித்து வருவதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், 'கொலை மிரட்டல் விடுத்த அந்தச் சாமியாரை கைது செய்ய வேண்டும் என்று கோரி கழகத்தினர் தமிழ்நாட்டின் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளித்து வருவதாகவும், அந்தச் சாமியாரின் உருவ பொம்மையை எரிப்பது, அவரின் படத்தைக் கொளுத்துவது, கண்டன சுவரொட்டிகளை ஒட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் தெரிகிறது.

நிறைய வேலைகள் இருக்கும்போது சாமியாரின் மீது வழக்கு போடுவது. உருவ பொம்மையை எரிப்பது. போன்ற, நேரத்தை வீணடிக்கக்கூடிய பணிகளில் நம் கழகத்தினர் எவரும் ஈடுபடக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன். என் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளை, கழகத் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலும், தலைமைக் கழகத்தின் ஆலோசனையைப் பெற்று சட்டத்துறையின் உதவியுடன் சட்டப்படி எதிர்கொள்வேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று கூறியுள்ள உதயநிதி, சனாதன ஒழிப்பு மாநாட்டிற்கும், தனக்கு ஆதரவு தெரிவித்தவர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com