முதலமைச்சர் ஸ்டாலினிடம் நீதிபதி சந்துரு ஆய்வறிக்கை வழங்கினார்
முதலமைச்சர் ஸ்டாலினிடம் நீதிபதி சந்துரு ஆய்வறிக்கை வழங்கினார்

சிறுவன் கொலை: கூர்நோக்கு இல்லங்கள் பற்றி முதல்வரிடம் நீதிபதி சந்துரு ஆய்வறிக்கை!

சென்னையை அடுத்த தாம்பரம் கன்னடபாளையம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கோகுல்சிறீயை செங்கல்பட்டு கூர்நோக்கு இல்ல அதிகாரிகள் 6 பேர் சித்திரவதை செய்து கொன்றதை அடுத்து, கூர்நோக்கு இல்லச் செயல்பாடுகள் பற்றி ஆய்ந்து அறிக்கைதர ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது.

கடந்த ஆண்டு டிசம்பர் 29ஆம் தேதி அன்று தாம்பரம் தொடர்வண்டி நிலையத்தில் சந்தேகத்தின்பேரில் பிடித்துச்செல்லப்பட்ட சிறுவன் கோகுல்ஸ்ரீயை, செங்கல்பட்டு கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பினர். அங்கு 31ஆம் தேதி இரவில் கோகுல்ஸ்ரீயின் தாயாருக்குப் பேசிய இல்ல அதிகாரிகள், செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு வருமாறு கூறி, மாறிமாறி தகவல் கூறி கடைசியாக அவரின் மகன் இறந்துவிட்டதாகவும்தெரிவித்தனர். அவரை கோகுல்ஸ்ரீயின் உடலைக்கூடப் பார்க்கவிடாமல் தனியாக அடைத்துவைத்து, 2023 ஜனவரி 2ஆம் தேதியன்றே மருத்துவமனைக்குக் கூட்டிச்சென்று சிறுவனின் உடலைக் காட்டினர்.  

மனிதவுரிமை அமைப்புகளின் தலையீட்டால், இந்தக் கொடுமை குறித்து மாநில அளவில் பிரச்னை எழுந்தது. எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் கடும் கண்டனம்தெரிவித்தன. அதைத்தொடர்ந்து, இளைஞர் நீதி அமைப்பின்கீழ் செயல்பட்டுவரும் கூர்நோக்கு இல்லங்கள், சிறப்பு இல்லங்கள் மற்றும் பாதுகாப்பு இல்லங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள், நிர்வாகத்திறன்களை மேம்படுத்து, சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப்பணி அதிகாரி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் சார்பாக ஒரு பிரதிநிதியும் உள்ளடக்கிய உயர்மட்டகுழு ஒன்று உருவாக்கப்படும் என்று 6.2.2023 அன்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார்.

அதன்படி, 11.04.2023 அன்று ஓய்வு பெற்ற நீதிபதி கே. சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைத்து ஆணையிடப்பட்டது. அந்தக் குழு 2.5.2023 பொறுப்பேற்று பொதுமக்களின் கருத்துக்களைக் கோரியது. அத்துடன் மாநிலத்தில் செயல்பட்டுவரும் அனைத்து கூர்நோக்கு இல்லங்கள், சிறப்பு இல்லங்கள் மற்றும் பாதுகாப்பு இல்லங்கள் ஆகியவற்றை நேரடியாக ஆய்வு மேற்கொண்டது.

அதன் அடிப்படையில் முழுமையான அறிக்கையைத் தயாரித்த நீதிபதி சந்துரு, முதலமைச்சர் ஸ்டாலினிடம் தலைமைச்செயலகத்தில் இன்று வழங்கினார்.  

logo
Andhimazhai
www.andhimazhai.com