பேருந்தில் படியில் நின்றபடி பயணம்செய்த சிறுவர்களைக் கடுமையாகத் தாக்கியும் நடத்துநரை இழிவாகப் பேசியும் அடாவடிசெய்த பா.ஜ.க. நடிகை ரஞ்சனா கைதுசெய்யப்பட்டார்.
சென்னை போரூரிலிருந்து குன்றத்தூரை நோக்கி நேற்று பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. நகரிலும் புறநகரிலும் பேருந்துகள் தட்டுப்பாடு ஒரு பக்கம் இருக்க, மாணவர்கள் படியில் தொங்கியபடி பயணம்செய்வதும் தொடர்ந்துவருகிறது.
ஏற்கெனவே ஏதாவது சர்ச்சையில் சிக்கிக்கொள்வதை வாடிக்கையாக வைத்திருக்கும் துணைநடிகை ரஞ்சனா, தன்னை காவல்துறை ஆள் எனக் கூறிக்கொண்டு, அந்தப் பேருந்தின் ஓட்டுநரிடம் முதலில் தகராறு செய்தார். பிறகு, படியில் பயணித்த சிறுவர்களை வலிந்து இறக்கிவிட்டு தலைமுடியைப் பிடித்தும் சட்டையைப் பிடித்தும் இழுத்து கடுமையாகத் தாக்கினார்.
யார் இவர், இப்படி அடாவடியாக ரவுடித்தனம் செய்கிறாரே என சுற்றியிருந்தவர்கள் கேட்கத் தயங்கினர். ஆனால் இதை யாரோ ஒருவர் படமெடுத்து சமூக ஊடகங்களில் பதிய வசமாக சிக்கினார், ரஞ்சனா.
மாங்காடு காவல்நிலைய அதிகாரிகள் இன்று காலையில் கெருகம்பாக்கத்தில் உள்ள ரஞ்சனாவின் வீட்டுக்குச் சென்று அவரைக் கைதுசெய்தனர். அவர் மீது மாணவர்களைத் தாக்கியது, ஆபாசமாகப் பேசியது, அரசு ஊழியரைப் பணிசெய்ய விடாமல் தடுத்தது உட்பட 5 குற்றப்பிரிவுகளின்படி வழக்கு பதிந்தனர்.