செந்தில் பாலாஜிக்கு உயர்நீதிமன்றமும் ஜாமின் மறுப்பு!
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பிணை வழங்க சென்னை உயர்நீதிமன்றமும் மறுத்துவிட்டது.
சட்டவிரோதப் பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்தின்படி கடந்த ஜூன் 14ஆம் தேதி செந்தில் பாலாஜி கைதுசெய்யப்பட்டார். இதய அறுவை சிகிச்சைக்குப் பிறகு புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவர், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் பிணை கேட்டிருந்தார். ஆனால் ஜூன் 16ஆம் தேதி, செப்டம்பர் 20 ஆம் தேதி என இரு முறை முதன்மை அமர்வு நீதிமன்றம் அவரின் மனுக்களைத் தள்ளுபடி செய்துவிட்டது.
அதைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜி தரப்பில் உயர்நீதிமன்றத்தில் பிணை கோரி முறையிடப்பட்டது. இதய அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் உடல் நலக்குறைவால் தொடர்ச்சியாகப் பாதிக்கப்படுவதாகவும் அதனால் பிணை வழங்க உத்தரவிடுமாறும் மனுவில் கோரப்பட்டது.
அதை இன்று விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், ’மருத்துவக் காரணத்தைக் கூறுவதை ஏற்க முடியவில்லை’ எனக் கூறி, மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டார்.
மேலும், செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமாரைக் கைதுசெய்ய வேண்டும் எனும் அமலாக்கத் துறையின் வாதத்தையும் நீதிபதி ஏற்றுக்கொண்டார்.