கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்

சென்னை- கிளாம்பாக்கம் பேருந்துநிலையம் திறப்பு, என்னென்ன வசதிகள் இருக்கு?

சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகளின் நெரிசலைக் குறைப்பதற்காக, செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்துநிலையம் இன்று திறந்துவைக்கப்பட்டது.  

கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் எனப் பெயரிடப்பட்டுள்ள இதை, முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலையில் திறந்து வைத்தார். அங்கு அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலையையும் அவர் திறந்துவைத்தார்.

மொத்தம் 88.52 ஏக்கர் பரப்பிலான இந்த முனையத்தில், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம், தமிழ்நாடு மாநிலப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளுக்கு 8 தொகுதிகளைக் கொண்ட 215 பேருந்து பாந்துகளும் (Bus Bays) அமைக்கப்பட்டுள்ளன.,

இருசக்கர- நான்கு சக்கர வாகனங்களுக்கு இரண்டடுக்கு நிறுத்துமிட வசதியும் உள்ளன.

சென்னையிலிருந்து கிளாம்பாக்கம் வரை செல்லக்கூடிய மாநகரப் பேருந்துகளை இயக்குவதற்கென 7 ஏக்கர் பரப்பளவில் 60 பேருந்துகள் நிறுத்தும் வசதியுடன், மாநகரப் பேருந்துக் கழக முனையம், ஜி.எஸ்.டி. சாலையையொட்டி அமைக்கப்பட்டுள்ளது. மாநகரப் பேருந்துக் கழக முனையத்திலிருந்து (MTC) பிரதான முனையத்திற்குச் செல்லும் பயணிகளுக்கு, நகரும்படிக்கட்டுகள், மின்தூக்கிகளுடன் கூடிய சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

DELL

பாலூட்டும் அறைகள், தரை தளத்தில் 53 கடைகள், 2 உணவகங்கள் / துரித உணவு மையம், முதல் தளத்தில் 47 கடைகள், 2 உணவகங்கள் / துரித உணவு மையம், ஏடிஎம் வசதி, தனி மருத்துவமனை - இலவச மருத்துவ மையம், போக்குவரத்து அலுவலகம், நேரக் குறிப்பாளர் அலுவலகம், ஆண்கள், பெண்கள், - திருநங்கைகளுக்கான கழிவறைகள், குடிநீர் வசதி, மின்விசிறிகள், இருக்கைகள், சூழல் வரைபடங்கள் வசதியுடன் பேருந்து நிறுத்துமிட அமைப்பு போன்ற அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

பயணிகளுக்காக 100 ஆண்கள், 40 பெண்கள், 340 ஓட்டுநர்களுக்கான படுக்கை வசதி கொண்ட ஓய்வறைகள் கட்டப்பட்டுள்ளன.  

இரண்டு தளங்களில் 2,769 இரு சக்கர வாகனங்கள், 324 இலகு ரக வாகன நிறுத்தும் வசதிகள், நீர் வழங்கல், மின்சாரம் மற்றும் தீயணைப்பு, அடித்தள காற்றோட்டம், முக அடையாளம் காட்டும் கேமராக்கள் போன்றவற்றின் ஒருங்கிணைந்த செயல்பாடுகளைக் கண்காணிப்பதற்காக ஒருங்கிணைந்த கட்டட மேலாண்மை அமைப்புமுறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

பேருந்து முனையத்தில் 5 தரை துடைக்கும் இயந்திரங்கள், ஒரு இயந்திர துடைப்பான் மூலம் நாள்தோறும் சுத்தமாக பராமரிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மூத்த குடிமக்கள், நோயாளிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் பயன்பாட்டிற்காக 5 மின்கல ஊர்தி வசதி செய்யப்பட்டுள்ளது. முனையத்தின் முகப்பில் 6 ஏக்கர் பரப்பளவில் நீரூற்றுகளுடைய  நடைபாதைகள் கொண்ட பூங்கா, பயணிகளின் அவசர மருத்துவ சிகிச்சைக்காக இலவச மையம் அமைக்கப்பட்டுள்ளதுடன் முனையத்தின் முகப்பில் ஆட்டோ / டாக்ஸி நிறுத்தத்திற்கு தனியாக இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இப்பேருந்து முனையத்திற்காக புதிதாக பிரத்யேகமான ஒரு புதிய புறநகர் இரயில் நிலையம் அமைக்கவும், இதிலிருந்து பேருந்து முனையத்தை இணைக்கும் வகையில் ஆகாய நடைபாதை வாயிலாக  இணைப்பதற்கான ஆரம்பகட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 

மேலும், புறநகர் பேருந்து முனையம், இந்திய தொல்லியல் துறை (ASI) நிலங்களுக்கு அருகாமையில் அமைந்திருப்பதால், 16 ஏக்கர் நிலப்பரப்பில் தொல்லியல் அறிவுசார் மையம் மற்றும் காலநிலைப் பூங்கா, நடைபாதை, விளையாட்டு மைதானம், மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த பூங்கா அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது.

மேலும், இப்பேருந்து முனையத்தில் புதியதாக காவல் நிலையம்,  இந்த முனையத்திலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சென்னை வெளிவட்டச் சாலை முடிச்சூர், வரதராஜபுரம் பகுதியில் 5 ஏக்கர் நிலப்பரப்பில் அனைத்து கட்டமைப்பு வசதிகளுடன் ஆம்னி பேருந்து நிறுத்துமிடம் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com