சேகர்பாபு, உதயநிதி மீது போலீஸ் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்- உயர்நீதிமன்றம்
சனாதன எதிர்ப்பு மாநாட்டில் கலந்துகொண்ட அமைச்சர்கள் சேகர்பாபு, உதயநிதி மீது காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதி கூறியுள்ளார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர் சங்கம் சார்பில் கடந்த சனாதன ஒழிப்பு மாநாடு நடத்தப்பட்டது. அதில் பேசிய அமைச்சர் உதயநிதி, கொசுக்களை ஒழிப்பதைப் போல சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். அவரின் இந்தப் பேச்சுக்கு பல்வேறு மதவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் பா.ஜ.க. தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், தான் பேசியது ஒன்றும் புதிதல்ல என்றும் ஏற்கெனவே அம்பேத்கர், பெரியார் போன்ற பெரியவர்கள் பேசியதையே, மீண்டும் தான் பேசியதாகவும் அவர் விளக்கம் அளித்தார்.
இந்த நிலையில், சென்னை திருவேற்காடு மகேஷ் கார்த்தி என்பவர், திராவிட கொள்கை ஒழிப்பு மாநாட்டை நடத்த அனுமதி தர உத்தரவிடக்கோரி வழக்கு தொடுத்திருந்தார். அதை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், எந்தக் கொள்கைக்கும் எதிராகப் பேசுவதை அனுமதிக்க முடியாது என மனுவைத் தள்ளுபடி செய்தார்.
மேலும், சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்ட அமைச்சர்கள் சேகர்பாபு, உதயநிதி மீது காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும் என்றும் அப்படி செய்யாமல் விட்டதால்தான் இப்படியொரு மனுவைத் தாக்கல்செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.