தஞ்சாவூர் மாவட்டத்தில் சாதிமறுப்பு மணம்புரிந்த இளம்பெண் ஐஸ்வர்யா ஆணவக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கைதுசெய்யப்பட்ட அவரின் பெற்றோர் பெருமாள்- ரோஜா இருவருdஅன், மேலும் மூவருக்கும் வரும் 24ஆம் தேதிவரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
ஒரத்தநாடு அருகில் உள்ள நெய்வவிடுதியைச் சேர்ந்த ஐஸ்வர்யா, அருகிலுள்ள பூவாளூர் நவீனை பள்ளிப் பருவத்திலிருந்தே காதலித்துவந்தார். இருவரும் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகில் அரவப்பாளையத்தில் பனியன் ஆலையில் வேலைசெய்துகொண்டிருந்தனர்.
கடந்த மாதம் 31ஆம் தேதி நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டு, வாடகைக்கு வீடு பிடித்து அதில் தங்கியிருந்தனர். இவர்களின் திருமணக் காட்சி சமூக ஊடகங்களில் பரவியதையடுத்து, பெண்ணின் தந்தை பெருமாள் பல்லடம் காவல்நிலையத்தில் புகார்செய்தார்.
இரு தரப்பினரையும் அழைத்து பஞ்சாயத்து செய்த ஆய்வாளர் ஐஸ்வர்யாவை அவரி ந் பெற்றோருடன் அனுப்பிவைத்தனர். அடுத்த நாள் ஜனவரி3ஆம் தேதி ஐஸ்வர்யாவை அவரின் பெற்றோரே எரித்துக்கொன்றது தெரியவந்தது.
ஐஸ்வர்யாவின் கணவர் நவீன் அளித்த புகாரில், பெருமாளும் ரோஜாவும் கைதுசெய்யப்பட்டனர்.
மேலும், அவர்களின் உறவினர்கள் சின்ராசு, முருகேசன், செல்வம் ஆகியோரும் கைதுசெய்யப்பட்டனர். பட்டுக்கோட்டை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட இவர்களை, வரும் 24ஆம் தேதிவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.