தமிழக மீனவர்களிடம் அதிக அபராதமா?- தடுக்க முதல்வர் கடிதம்!

tamilnadu fishermen
தமிழக மீனவர்கள்
Published on

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படும் மீனவர்கள் மீது அதிக அளவில் அபராதம் விதிப்பதைத் தடுத்திடவும், மீனவர்களுக்குத் தேவையான சட்ட உதவிகளை வழங்கிடவும், கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களின் மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவித்திடவும் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி
வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். 

அவர் இன்று அனுப்பிய கடித விவரம்: 

” மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகாரைச் சேர்ந்த 37 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கடந்த 21-9-2024 அன்று சிறைபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுத்திட நடவடிக்கை எடுக்கவேண்டும். இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படும் மீனவர்களிடம் அதிக அளவில் அபராதம் வசூலிப்பதைத் தடுத்திடவும், மீனவர்களுக்குத் தேவையான சட்ட உதவிகளை வழங்கிடவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த 37 மீனவர்கள், IND-TN-16-MO-3451, IND-TN-16-MO-1544 ஆகிய பதிவெண்களைக் கொண்ட இரண்டு படகுகள் மற்றும் பதிவு செய்யப்படாத ஒரு படகு என மூன்று படகுகளில் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், இலங்கைக் கடற்படையினரால் கடந்த 21.09.2024 அன்று சிறைபிடிக்கப்பட்டுள்ளன.

நான் ஏற்கெனவே சுட்டிக்காட்டியபடி, தமிழ்நாட்டு மீனவர்கள் தங்களது பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகளில் மீன்பிடிக்கும் போது, இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கைது செய்யப்படும் மீனவர்களிடம், அவர்களது சக்திக்கு மீறிய அபராதங்களை இலங்கை நீதிமன்றங்கள் விதித்து வருகின்றன.

கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களுக்குத் தேவையான சட்ட உதவிகளை வழங்கிடவும், சிறைபிடிக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவித்திடவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.” என்று முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com