சென்னை டிடிதமிழ் அரசு தொலைக்காட்சி நிறுவனத்தில் இன்று மாலையில் இந்தி மாதக் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக ஆளுநர் இரவி கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அப்போது, ஆளுநர் முன்னிலையில் அதன் ஒரு வரியை நீக்கிவிட்டுப் பாடினார்கள்.
அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவதற்கான விதிமுறைகளும் சட்டமும் உள்ளது. ஏற்கெனவே இதை மீறியதற்காக காஞ்சிபுரம் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சர்ச்சையில் சிக்கினார்.
அதைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து இப்போது அவமதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது என பல கட்சிகளின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
முதலமைச்சர் ஸ்டாலின் ஆளுநரைத் திரும்பப்பெற வேண்டும் என அண்மையில் முதல் முறையாகக் கோரிக்கை விடுத்தார்.
இதுகுறித்து அவர் தன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள ’ஆளுநரா, ஆரியநரா’ எனும் தலைப்பிலான குறிப்பில், “ திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது தமிழ்நாட்டின் சட்டத்தை மீறுவதாகும்! சட்டப்படி நடக்காமல், இஷ்டப்படி நடப்பவர் அந்தப் பதவி வகிக்கவே தகுதியற்றவர். இந்தியைக் கொண்டாடும் போர்வையில் நாட்டின் ஒருமைப்பாட்டையும் இந்த மண்ணில் வாழும் பல்வேறு இன மக்களையும் இழிவுபடுத்துகிறார் ஆளுநர்! திராவிட ஒவ்வாமையால் அவதிப்படும் ஆளுநர் அவர்கள், தேசிய கீதத்தில் வரும் திராவிடத்தையும் விட்டுவிட்டுப் பாடச் சொல்வாரா? தமிழ்நாட்டையும் - தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் வேண்டுமென்றே தொடர்ந்து அவமதித்து வரும் ஆளுநரை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்ப பெறவேண்டும்!” என்று வலியுறுத்தியுள்ளார்.
முதலமைச்சரின் கண்டன அறிக்கை வெளியான சிறிது நேரத்தில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உட்பட்ட பல கட்சிகளின் தலைவர்கள், திராவிடம் என்ற வார்த்தை தவிர்க்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தனர்.
அதையடுத்து, டிடி தமிழ் அலுவலகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து குளறுபடியில் ஆளுநருக்கு எந்தவிதப் பங்கும் இல்லை என்று ஆளுநர் மாளிகையின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், தமிழ் மீது ஆளுநருக்குப் பெரும் மதிப்பு உள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆளுநர் மாளிகை அறிக்கைக்குப் பிறகு டிடி தமிழ் சார்பில் எந்த நபரின் பெயரும் இல்லாமல் ஓர் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், தமிழ்த்தாய் வாழ்த்து குளறுபடியில் ஆளுநரிடம் தாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.