முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டிலும் மோடி எதிர்ப்பலை! – ஸ்டாலின் பேட்டி

மோடிக்கான எதிர்ப்பு அலை பல மாநிலங்களில் உள்ளது போல் தமிழ்நாட்டிலும் உள்ளது என முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

மக்களவைத் தேர்தலுக்கான முடிவுகள் தற்போது வெளியாகிவிரும் நிலையில் தமிழகத்தில் திமுக 40க்கு 40 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்த நிலையில், திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது:

” 400 இடங்கள் என்று கூறிய பா.ஜ.க.வுக்கு ஆட்சியமைக்கப் போதுமான தொகுதிகள் கிடைக்கவில்லை. பா.ஜ.க.வின் பண பலம் எடுபடவில்லை. பா.ஜ.க.வின் கனவு பலிக்கவில்லை.

இரண்டு நாள்களுக்கு முன்னர் வந்த தேர்தல் கருத்துக்கணிப்பு மூலமாக பா.ஜ.க. உளவியல் ரீதியான தாக்குதலைத் தொடுத்தது. ஆனால் இந்தத் தேர்தல் முடிவு என்பது அரசியல் சாசனத்தை மாற்றிடலாம், வெறுப்பு பிரச்சாரத்தின் மூலமாக மக்களைப் பிளவுப்படுத்திவிடலாம் என்று நினைத்த பா.ஜ.க.வுக்கு எதிரான மக்களின் தீர்ப்பு இது.

பா.ஜ.க.வின் பண பலம், அதிகார துஷ்பிரயோகம், ஊடக பரப்புரை என எல்லாவற்றையும் உடைத்தெறிந்து பெற்றிருக்கும் இந்த வெற்றி மகத்தான வெற்றியாகும்.

தேர்தல் முடிவு முழுமையான வெளியான பிறகு, இந்திய ஜனநாயகத்தையும் அரசியலமைப்புச் சட்டத்தையும் காக்கத் தேவையான ஜனநாயக செயல்பாட்டை தி.மு.க. முன்னெடுக்கும்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா ஆண்டு நடந்துகொண்டிருக்கிறது. மக்களவைத் தேர்தல் வெற்றியை அவருக்குக் காணிக்கையாக்குவோம் என்று சொல்லியிருந்தோம். இந்த மகத்தான வெற்றியை அவருக்கு காணிக்கையாக்குகிறோம்.

மோடிக்கு எதிர்ப்பு அலை பல மாநிலங்களில் இருக்கிறது. அதுபோல் தமிழ்நாட்டிலும் உள்ளது. அதற்கான உதாரணம்தான் இந்த வெற்றி. பிரதமர் மோடி ஒடிசாவில் என்ன பேசினார் என்பது எல்லோருக்கும் தெரியும். அவர் திருக்குறள் பாராட்டிப் பேசியதெல்லாம் தமிழர்கள் ஏமாற்றுவதற்காக. இது மக்களுக்கும் தெரியும்.” என்றார் ஸ்டாலின்.

நாளை தில்லியில் நடைபெறவுள்ள இந்தியா கூட்டணியின் கூட்டத்துக்குச் செல்கிறேன் என்றும் அவர் கூறினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com