தமிழ் நாடு
அரசுப் பேருந்துஓட்டுநர்கள், நடத்துநர்கள் உட்பட்ட ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் தற்காலிக ஓட்டுநர்களை வைத்து ஈடுகட்ட அரசு முடிவுசெய்தது. அனைத்து மாவட்டங்களிலும் அரசுப் பேருந்துகளை தற்காலிக ஓட்டுநர்களும் இயக்கிவருகிறார்கள். இதில் பல இடங்களில் போதிய பயிற்சி இல்லாதவர்கள் ஓட்டிய பேருந்துகள் விபத்தில் சிக்கின.
விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனத்திலிருந்து செஞ்சியை நோக்கி இன்று காலையில் சென்ற அரசுப் பேருந்து,வேன் மீது மோதியது. நல்வாய்ப்பாக பயணிகளுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் தற்காலிகப் பேருந்து ஊழியர் ஓட்டிய பேருந்து, சாலையிலிருந்து பள்ளத்தில் சிக்கியது. இந்த சம்பவத்தில் மாணவர்கள், பெண்கள் காயமடைந்தனர். அவர்களுக்கு அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி அளிக்கப்பட்டது.