தாமிரபரணி வன்கொடுமை : தனிநபர் பிரச்னையாகப் பார்ப்பதா?- சி.பி.எம். கவலை

பாளை மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர் சிகிச்சை
பாளை மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர் சிகிச்சை
Published on

நெல்லை வன்கொடுமையை மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் தனிநபர் சார்ந்த பிரச்னையாக, சட்டம் - ஒழுங்கு பிரச்னையாக அணுகுவது பிரச்னையைத் தீர்க்க உதவாது என்று மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது. 

அக்கட்சியின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். கண்ணன் தலைமைவகிக்க, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர்கள் பி.சம்பத், உ.வாசுகி, பெ.சண்முகம் உட்பட செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். அதில் இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

” நெல்லை அருகே உள்ள மணிமூர்த்திஸ்வரம் பகுதியில் பட்டியிலினத்தைச் சார்ந்த இளைஞர்கள் மனோஜ்குமார் (21) மற்றும் அவரது நண்பர் மாரியப்பன் (19) இருவரும் கடந்த அக்டோபர் 31 அன்று இரவு 7:30 மணிக்கு தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்றபோது ஆற்றின் கரையோரமாக அவர்களை ஒரு கும்பல் வழிமறித்து அவர்களின் செல்போன் மற்றும் ஏ.டி.எம். கார்டுகளை பறித்து கொண்டு அவர்களின் ஊர் மற்றும் சாதியை கேட்டுள்ளனர். பட்டியிலினத்தை சார்ந்தவர்கள் என தெரிந்தவுடன் அருகாமையில் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று மனோஜ் மற்றும் மாரியப்பனை நிர்வாணப்படுத்தி அவர்களது முகத்தில் சிறுநீர் கழித்து துன்புறுத்தியும், கம்பு மற்றும் ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். சுமார் 5 மணி நேரம் அவர்களை பிடித்துவைத்து அடித்துள்ளனர். பின்னர் இருவரும் தப்பித்து நிர்வாணமாகவே வீடுவரை சென்றுள்ளனர். அவர்கள் புகாரின் பேரில்  சாதி ஆதிக்க நபர்கள் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மனிதத் தன்மையற்ற முறையில் நடந்துள்ள இச்சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம்.”

”நெல்லையில் சாதிய ரீதியிலான தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இளைஞர்கள் மத்தியில் சாதிவெறி மற்றும் பெருகி வரும் போதை பழக்க வழக்கங்களும் முக்கிய காரணமாக உள்ளது. பெரும்பாலும் சமீபத்தில் நடந்துள்ள இந்த போன்ற தாக்குதல்களில் ஈடுபடுபவர்கள் 20 வயதுக்கு உட்பட்டவர்களே என்பது கவலைக்குரியது. மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் தனிநபர் சார்ந்த பிரச்னையாக, சட்டம் - ஒழுங்கு பிரச்னையாக அணுகுவது பிரச்னையைத் தீர்க்க உதவிடாது என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.” என்றும், 

” கிருஷ்ணகிரி மாவட்டம், சோக்காடி கிராமத்தில் பட்டியலின மக்கள் மீது ஊராட்சி மன்ற தலைவர் அவரது சகோதரர் ராமலிங்கம் ஆகியோர் தலைமையில் ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து 29.10.2023 அன்று பட்டியலின மக்கள் குடியிருப்புக்களில் ஆயுதங்களுடன் உள்ளே புகுந்து வீடுகளை அடித்து உடைத்து, தீ வைத்தும், மக்கள் மீது கற்களை வீசியும் கொடூரமாக தாக்கியுள்ளனர். இத்ததாக்குதலில் கொடுங்காயங்கள் ஏற்பட்டு பலர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இந்தக் கொடூரமான தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

காவல்துறை இந்தப் பிரச்சனையில், இரு தரப்பினும் கைது என்ற முறையில் பாதிக்கப்பட்ட பட்டியலின மக்களையும் கைது செய்திருப்பது சரியல்ல என்பதை சுட்டிக்காட்டுகிறோம். எனவே, சிறையில் அடைக்கப்பட்ட பட்டியலின மக்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்; இத்தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதுடன், அந்த கிராமத்தில் சுமூகமான நிலையை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தீண்டாமை உள்பட்ட சாதி மேலாதிக்க கொடுமைகளில் ஈடுபடுவோர் மீது உரிய குற்ற நடவடிக்கைகளை பாரபட்சமின்றி எடுத்திட வேண்டும். அனைத்து கட்சி - அமைப்புகள் கொண்ட குழுக்கள் அமைத்து சாதிய சக்திகளை தனிமைப்படுத்திட வேண்டும். மக்கள் மத்தியில் அறிவியல் ரீதியான முற்போக்குக் கருத்தியலை வளர்த்தெடுக்கவேண்டும்.” என்றும் மாநிலச் செயற்குழு வலியுறுத்துவதாக மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.  

logo
Andhimazhai
www.andhimazhai.com