தி.க. பெயரில் போலி சமூக ஊடகப் பக்கங்கள்- மறுப்பு விளக்கம்!

தி.க. பெயரில் போலி சமூக ஊடகப் பக்கங்கள்- மறுப்பு விளக்கம்!

திராவிடர் கழகத்தின் பெயரில் பல போலியானதும் அதிகாரபூர்வமற்றதுமான சமூக ஊடகப் பக்கங்கள் இருப்பதாகவும் இதுகுறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வமைப்பின் தகவல் தொழில் நுட்பக் குழு விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது.  

பத்திரிகை எழுத்தாளர் ஷாலின் மரிய லாரன்ஸ் என்பவரின் சமூக ஊடகப் பக்கங்களில் அவ்வப்போது சர்ச்சை எழுவது தொடர்ந்துவருகிறது. இதில், அண்மையாக திராவிடர் கழகம் திருவொற்றியூர் எனும் பெயரிலான சமூக ஊடகப் பக்கத்தில் ஷாலின் பற்றி இழிவுபடுத்தி குறிப்பிடப்பட்டுள்ளது என பல தரப்பினரும் பிரச்னை எழுப்பினர். ஷாலின் மீதும் பல தரப்பினரும் குற்றம்சாட்டும்படி அவருடைய பதிவுகளும் உள்ளன. இந்நிலையில், திராவிடர் கழகம் சார்பில் விளக்க அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.  

அதன் விவரம்:

” திராவிடர் கழகத்தின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கம் திராவிடர் கழகம் - Dravidar Kazhagam - www.facebook.com/dravidarkazhagam என்பது மட்டுமே ஆகும்.

மாவட்டங்கள், நகரங்கள், பிற ஊர்களின் பெயர்களில் அதிகாரப்பூர்வக் கணக்குகள் எதுவும் இல்லை. தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், தமிழர் தலைவர் ஆசிரியர் ஆகியோரின் பெயர்களில் போலிக் கணக்குகளும், சில இடங்களில் ஆதரவாளர் கணக்குகளும் செயல்பட்டு வருகின்றன. சில போலிக் கணக்குகள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு இருந்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.

திராவிடர் கழகம் என்னும் பெயரில் இருக்கும் பக்கங்களை அறிந்து அவற்றை முறைப்படுத்த கழகத்தின் தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு குழு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. கழகத்தின் தகவல் தொழில்நுட்பக் குழு பொறுப்பாளர்கள் தவிர வேறு யாரும் இத்தகைய பக்கங்களை நடத்த வேண்டாம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆதரவாளர்கள் என்போர் தத்தமது பெயர்களில் இயங்கலாமே தவிர கழகத்தின் பெயரைப் பயன்படுத்துவதும், அதில் கட்டுப்பாட்டுக்கு விரோதமாக எழுதுவதும் கண்டிக்கத்தக்கதாகும். அத்தகைய பக்கங்களைத் தோழர்கள் நமது கவனத்துக்குக் கொண்டுவருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

(அண்மையில் அப்படி நம் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட ஒரு பக்கத்தின் மீது பேஸ்புக் மூலம் நாம் அளித்த புகார் அடிப்படையில் அந்த பக்கம் நீக்கப்பட்டுள்ளதாக அறிகிறோம்.)” என்று திராவிடர் கழக தகவல் தொழில் நுட்பக் குழுவின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

-

logo
Andhimazhai
www.andhimazhai.com