தி.மு.க.வுக்குப் போட்டியாக அ.தி.மு.க.விலும்... எடப்பாடி பழனிசாமி புது அறிவிப்பு!
தி.மு.க.வில் இளைஞர் அணி, மகளிர் அணி, வாக்குச்சாவடி பொறுப்பாளர் கூட்டம் என மக்களவைத் தேர்தலுக்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில், அதை எதிர்கொள்ளும்படியாக அ.தி.மு.க.வும் களம் இறங்கியுள்ளது.
மக்களவைத் தேர்தல் பரபரப்பு தொடங்கி விறுவிறுவெனப் போய்க்கொண்டிருக்கும் நிலையில், தி.மு.க. தரப்பில் மண்டலவாரியாக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பாசறைக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்துவருகிறார். மகளிர்க்கு இலவசப் பேருந்துப் பயணம், மாத உரிமைத் தொகை ஆகிய திட்டங்களைத் தொடர்ந்து, நாளை சென்னையில் தி.மு.க. மகளிர் அணியின் சார்பில் மாநாடு நடைபெறவுள்ளது.
எதிர்த்தரப்பில், அண்மையில் கூடிய அ.தி.மு.க. மாவட்டச்செயலாளர் கூட்டத்தில் தேர்தல் வாக்குச்சாவடி மட்டத்திலான வேலைகள் பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து வாக்குச்சாவடிக் குழுக்கள், இளைஞர்- இளம்பெண் பாசறை அமைத்தல், மகளிர் அமைப்புகளை உருவாக்குதல் ஆகிய பணிகள் நடந்துவருகின்றன என்றும், அதை மேற்பார்வையிடுவதற்காக கட்சியின் 82 மாவட்ட அமைப்புகளுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவிப்பு வெளியிட்டார்.
நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள் குறிப்பிட்ட மாவட்டத்துக்கு தொகுதிக்கு நேரில் சென்று பணிகளை மேற்பார்வையிட வேண்டும்; இதற்கு அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் முழுஏற்பாடுகளையும் செய்யவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதில் புதுச்சேரி சேர்க்கப்படவில்லை. அண்மையில் புதுச்சேரி அ.தி.மு.க. முன்னைய இரண்டு பிரிவுகளை ஒன்றாக்கி, ஒரே மாநில அமைப்பாக மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.