தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி ஊழல் செய்யத்தான் இருக்கிறது என்று கன்னியாகுமரியில் பிரதமர் மோடி இன்று பேசினார்.
பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரிமாரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் பாரதிய ஜனதா கட்சியின் பொதுக்கூட்டத்தில் பேசினார். இதில், அண்மையில் பாஜகவில் இணைந்த சரத்குமார், அவரின் மனைவி ராதிகா, காங்கிரஸ் முன்னால் எம்எல்ஏ விஜயதாரணி, கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர். மத்திய அமைச்சர் எல். முருகன், பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோரும் இதில் பேசினர்.
பிரதமர் மோடி பேசியது:
“ இந்தியா கூட்டணி கட்சிகளின் ஊழல் பட்டியல் மிகவும் நீளமானது. 2ஜி, நிலக்கரி சுரங்க ஊழல் என பட்டியல் நீண்டு செல்லும். ஆட்சிக்கு வந்து கொள்ளையடிப்பதே இந்தியா கூட்டணி கட்சிகளின் கொள்கை. திமுக, காங்கிரஸ் தமிழகத்தின் எந்த வளர்ச்சித் திட்டங்களையும் கொண்டுவர முடியாது. அவர்கள் மக்களை எப்படி சுரண்டலாம் என் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
மார்த்தாண்டம் -பார்வதிபுரம் மேம்பாலம் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகுதான் நிறைவேற்றப்பட்டது.
கன்னியாகுமரி திருவனந்தபுரம் இடையிலான சிறப்பு வழித்தடத்தையும் பாஜக ஆட்சி தான் நிறைவேற்றியது.
திமுக, தமிழ்ப் பண்பாட்டின் தமிழ்நாட்டின் எதிரி, சாதாரண எதிரி அல்ல, நம்முடைய பாரம்பரியத்தையும் தொன்மை காலத்தையும் கண்மூடித்தனமாக எதிர்க்கின்ற எதிரி.
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை தமிழக கோவில்களில் டிவியில் காட்டுவதற்கு கூட தடை விதித்தது. அது நமது பண்பாட்டின் மீது வெறுப்பை உமிழ்கிறது.
கன்னியாகுமரி மக்களை அது வஞ்சிக்கிறது. மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த ஜோடி குரூஸ் பணிகளை நான் பாராட்டுகிறேன். தமிழக வளர்ச்சிக்கு திமுக எதிரியாக இருக்கிறது. ஜல்லிக்கட்டுக்கு காங்கிரஸ் தடை விதித்த போது திமுக அமைதியாக வேடிக்கை பார்த்தது. பாஜக அரசு தான் ஜல்லிக்கட்டை மீண்டும் கொண்டு வந்தது.
நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவுவதைக் கூட திமுக புறக்கணித்து. தமிழகத்தின் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. திமுக, காங்கிரஸ் ஆகியவை செய்த தவறுகளுக்கு பதில் சொல்ல வேண்டும்.” என்று பிரதமர் மோடி பேசினார்.