திராவிட மாடலே இனி அனைத்து மாநிலங்களுக்கும்: முதல்வர் பெருமிதம்

தமிழ்நாடு அரசின் இரண்டு ஆண்டு சாதனைகளை மக்களிடம் எடுத்துரைக்கக் கூறி திமுகவினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், திராவிட மாடல் அரசின் சாதனைத் திட்டங்களைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் திசை திருப்பும் வகையில் அரசியல் கட்சியினர், சமூக வலைதளங்களில் அடிப்படை ஆதாரமற்ற பல காணொளிகளைப் பரப்பிக் கொண்டிருப்பதாக சாடியுள்ளார். திமுகவை விமர்சித்தால்தான் தங்களுக்கு அடையாளமும் முகவரியும் கிடைக்கும் என்று அவதூறு பரப்பப்படுவதாகக் கூறியுள்ள அவர், அரசியல் காழ்ப்புணர்வாளர்களின் அவதூறுகளை முறியடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

திராவிட மாடல் அரசின் இரண்டாண்டு சாதனைகளை விளக்கி வரும் 7, 8, 9 ஆகிய மூன்று நாட்களில் ஆயிரத்து 222 இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளதாகவும், மே 7ஆம் தேதி சென்னை பல்லாவரம் கன்டோண்மெண்ட் நகரில் நடைபெறும் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில், தான் உரையாற்ற உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இலவசத் திட்டங்களால் சீரழிவு ஏற்பட்டுவிட்டதாக இழிவாகப் பேசியவர்கள், இப்போது கர்நாடக சட்டமன்றத் தேர்தல் களத்தில் என்னென்ன வாக்குறுதிகளை வழங்கியிருக்கிறார்கள் என்பதிலிருந்து அவர்களின் இரட்டை வேடம் அம்பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் விமர்சித்துள்ளார்.

தமிழ்நாட்டின் திராவிட மாடலே இனி இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்குமான ஆட்சி நிர்வாக ஃபார்முலா என்பது உறுதியாகியிருப்பதாகக் கூறியுள்ள முதலமைச்சர், இருளை விரட்டிய இரண்டாண்டு கால விடியல் ஆட்சியின் வெற்றி இது என்றும் ஐந்தாண்டு முழுமைக்கும் இந்த வெற்றி தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com