புயல் மழையால் திருவள்ளூர் மாவட்டத்தில் 10 ஆயிரம் ஏக்கர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 6,050 ஏக்கர் நெற்பயிர்களும், 540 ஏக்கர் காய்கனிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அச்சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் சாமி.நடராஜன் விடுத்துள்ள அறிக்கையில், ” புயலால் சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழை பெய்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கண்ட மாவட்டங்களில் பல இடங்களில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.” என்றும்,
திருவள்ளூர் மாவட்டத்தில், ”கும்முடிப்பூண்டி வட்டத்தில் வழுதிலம்பேடு, ரெட்டம்மேடு, அயநல்லூர், பொன்னேரி வட்டம் தேவம்பேடு, மெதூர், மீஞ்சூர் ஒன்றியத்தில் காட்டூர், தத்தைமஞ்சு, வாயலூர், திருவள்ளவாயல், ஊத்துக்கோட்டை வட்டத்தில் தாராட்சி, காக்கவாக்கம், வெங்கல், போந்தவாக்கம் ஆகிய ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் கதிர் வந்தும், வராமலும் உள்ள பயிர்கள் முற்றிலும் சாய்ந்து தண்ணீரில் மூழ்கியுள்ளது. இந்த பயிர்களில் இனி கதிர் வந்தாலும் அவை முற்றிலும் பதராகத்தான் வரும்.” என்றும் வேதனையுடன் கூறியுள்ளார்.
மேலும், ”காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் வட்டம் தொடூர், வேலியூர், புதுப்பாக்கம், ஈஞ்சம்பாக்கம், கீழ்கதிர்பூர், மற்றும் பெரும்பத்தூர், வாலாஜாபாத், உத்திரமேரூர், குன்றத்தூர் ஆகிய வட்டங்கள் உட்பட பல கிராமங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த 6050 ஏக்கர் நெல் வயல்கள் முற்றிலும் சாய்ந்து தண்ணீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் 540 ஏக்கரில் பயிரிடப்பட்ட காய்கறிகள் மற்றும் 50க்கும் மேற்பட்ட கால்நடைகள் இறந்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
”செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் பயிர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு உடன் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம் வழங்கிட வேண்டும். மேலும் வரலாறு காணாத அளவிற்கு பெய்த மழையில் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் நிவாரணம் பணிகளை மேற்கொள்ள, ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு அரசு கோரியுள்ள நிவாரண நிதியை உடன் தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு வழங்கிட வேண்டும்.” என சாமி. நடராஜன் தன் அறிக்கையில் கூறியுள்ளார்.