தூத்துக்குடி குறிஞ்சி நகர் போல் பேட்டை பகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் வெள்ள சேதத்தைப் பார்வையிட்டார்.
தூத்துக்குடி குறிஞ்சி நகர் போல் பேட்டை பகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் வெள்ள சேதத்தைப் பார்வையிட்டார்.

தூத்துக்குடி, எட்டயபுரத்தில் வெள்ள சேதம்- முதல்வர் பார்வையிட்டார்!

அதி கனமழையால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களுக்கு நேரில் சென்று பார்வையிட முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை தூத்துக்குடியைச் சென்றடைந்தார். தூத்துக்குடி, மறவன் மடம் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களைச்  சந்தித்து, வெள்ள சேத விவரங்களையும், அவர்களது கோரிக்கைகளையும் கேட்டறிந்து, மனுக்களை பெற்றுக் கொண்டார். அப்பகுதியில் வெள்ளத்தால் சேதமடைந்த பாலத்தை சீரமைக்கும் பணிகளையும் பார்வையிட்டார்.

டிசம்பர் 17ஆம் தேதி அதிகனமழை பெய்ய தொடங்கியவுடன், 18ஆம் தேதி முதல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மில்லர்புரம், பிரையன்ட் நகர், அண்ணா நகர், டீச்சர்ஸ் காலனி, ராஜீவ் நகர், சீலோன் காலனி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 600 பேரை புனித மரியன்னை பள்ளியில் உள்ள நிவாரண மையத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

அங்கு சென்று மக்களிடம் நிலவரம் குறித்து கேட்டறிந்து, தங்கியுள்ளவர்களுக்கு அரிசி, வேஷ்டி, சேலை, போர்வை, பாய், பிஸ்கட், ரொட்டி, பால் பவுடர், தண்ணீர் பாட்டில் உட்பட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார்.

அதைத் தொடர்ந்து, எட்டையபுரம் 3ஆவது கேட் மேம்பாலத்திலிருந்து வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை முதலமைச்சர் பார்வையிட்டு, வெள்ள நீரை அகற்ற விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பின்னர், குறிஞ்சி நகர் போல்பேட்டையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியிலும் மக்களிடம் பேசி, சூழ்ந்துள்ள வெள்ளநீரை அகற்றும் பணியை விரைந்து மேற்கொள்ள உத்தரவிட்டார்.

நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, சமூக நலன் - மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன், பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சட்டமன்ற உறுப்பினர்கள், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் என்.பி. ஜெகன்ஆகியோருடன் அதிகாரிகளும் இருந்தனர். 

logo
Andhimazhai
www.andhimazhai.com