அமைச்சர் சேகர்பாபு
அமைச்சர் சேகர்பாபு

கோயில் சொத்து கொள்ளை: நிர்மலா சீதாராமனுக்கு சேகர்பாபு தந்த பதில் என்ன?

கோயில் சொத்துகளை திருடுவதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதற்கு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு கண்டனம் தெரிவித்துள்ளார்.

மதுரை கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் சில நாள்களுக்கு முன்னர் பேசிய நிர்மலா சீதாராமன், தமிழ்நாட்டில் உள்ள கோயில்களின் சொத்துகளை எல்லாம் திருடிச் செல்கிறார்கள் என்றும் அந்த சொத்துகள் யாருக்கு போகிறது என்பதே தெரியவில்லை என்றும் நம் நாட்டு சொத்துக்கள் வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்லப்படுவதைத் தடுக்கவேண்டும் என்கிறபடியும் குறிப்பிட்டார்.

அமைச்சர் நிர்மலாவின் அந்தப் பேச்சுக்கு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு சென்னையில் நேற்று ஊடகச் சந்திப்பில் பதிலளித்தார்.

”உயர் பொறுப்பில் இருக்கும் ஒருவர் ஆதாரம் இல்லாமல் இப்படி ஒரு குற்றச்சாட்டைக் கூறுவது கண்டிக்கத்தக்கது. வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்கிறபடி பேசக்கூடாது. இறைவனைக் காத்து இறைவனின் கோயில் சொத்துக்களையும் காக்கின்ற ஆட்சியாகத்தான் தி.மு.க.வின் ஆட்சி இருக்கிறது. இந்துக்களுக்கு எதிரான ஆட்சி இது என்ற பிம்பத்தை உருவாக்க நினைத்தார்கள்; அது நிறைவேறவில்லை. இந்த அரசு பொறுப்பேற்றதிலிருந்து அறநிலையத்துறைக்கு களங்கம் விளைவிக்கும்வகையில் சமூக ஊடகங்களில் கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள். கோயில் சொத்துக்கள் கொள்ளை என திட்டமிட்டு அவதூறு பரப்புகிறார்கள்.” என்றவர், கோயில்களுக்கு அரசாங்கம் செய்துவரும் பணிகளைப் பட்டியலிட்டார்.

“ஆனால் இந்த ஆட்சியில்தான் 200 உலோகத் திருமேனி சிலைகள் உட்பட கலைப் பொருட்களும் சேர்த்து 400 கோயில் பொருட்கள் மீட்கப்பட்டிருக்கின்றன. திருக்கோவில்களைச் சீர்படுத்த ஏராளமாக நிதி வழங்கப்பட்டுள்ளது. 5,000 கோடி ரூபாய் கோயில் சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன. 1,777 உலோகத் திருமேனி அறைகள் கட்ட அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. 18 கோயில்களில் 108 விளக்கு பூஜை நடக்கிறது. கோயில்களுக்கு அதிகமாக அரசு மானியம் வழங்கியது இந்த ஆட்சிதான். இந்த ஆட்சி வந்தபின் 627 கோடி ரூபாய் இதுவரை மானியம் வழங்கப்பட்டுள்ளது. காணாமல்போன சிலைகளை மீட்பது ஒரு பக்கம் இருந்தாலும் சிலைகள் களவு போகாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உயர் பொறுப்பில் உள்ளவர்கள் ஆதாரங்களுடன் குற்றச்சாட்டை வைத்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றும் அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com