நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்Manoj Kumar, wikipedia

நிர்மலா சீதாராமனை நீக்குமாறு குடியரசுத் தலைவருக்கு ஐ.ஆர்.எஸ். அதிகாரி கடிதம்!

அமலாக்கத் துறையைக் கைப்பாவை போலப் பயன்படுத்துவது நிர்மலா சீத்தாராமனின் பதவிக்காலத்தில் அதிகரித்துள்ளது என்றும் எனவே அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கவேண்டும் என்றும் குடியரசுத் தலைவருக்கு வருவாய்த் துறை அதிகாரி கடிதம் அனுப்பியுள்ளார். 

சென்னை, வடக்கு ஜிஎஸ்டி துணை ஆணையர் பி.பாலமுருகன் என்பவரே இன்று அக்கடிதத்தை அனுப்பியுள்ளார். இதனால் மைய அரசின் நிதித்துறையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டார விவசாயி மீதான அமலாக்கத் துறை விசாரணையானது, அந்த அமைப்பை பா.ஜ.க. தன்னுடைய கைப்பாவையாகப் பயன்படுத்துவதற்கான சிறந்த உதாரணம் என்று அவர் தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, நிதித் துறை அமைச்சராக நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்றபிறகு, பா.ஜ.க.வின் கொள்கை அமலாக்கத் துறையாக மாற்றப்பட்டுவிட்டது என்றும் அவர் தன் அதிகார வரம்பு கடந்து கடுமையாகக் கூறியிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தன்னுடைய 30 ஆண்டு அனுபவத்தில் பொதுவாக உள்ளூர் அரசியல்வாதிகள் மைய நிதித்துறையின் செயற்பாடுகளில் குறுக்கீடு செய்யமாட்டார்கள்; அப்படியேதும் வந்தால்கூட அது டெல்லிக்குப் போய் வரும்; இப்போதோ நிலைமை தலைகீழாக மாறிவிட்டது; இந்த விவகாரத்துக்கு நிர்மலா சீதாராமனே முழுவதும் பொறுப்பாவார் என்றும் வருவாய்த் துறை அதிகாரி பாலமுருகன் குறிப்பிட்டுள்ளார்.

அமலாக்கத் துறையைக் காப்பாற்றவும் தமிழ்நாட்டின் ஏழை தலித் விவசாயியின் நீதிக்காகவும் குடியரசுத்தலைவர், நிதியமைச்சர் பொறுப்பிலிருந்து நிர்மலா சீதாராமனை விலக்கவேண்டும் என்று அந்த அதிகாரி தன் கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

பாலமுருகனின் இந்த அதிகார வரம்பு மீறிய கடிதத்திற்குப் பின்னால் அரசியல் செயற்பாடுகள் இருக்கின்றனவா என்பது கேள்வியாக எழுந்துள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com