தூத்துக்குடி 3ஆம் நாள் வெள்ள பாதிப்பு
தூத்துக்குடி 3ஆம் நாள் வெள்ள பாதிப்பு

நெல்லை, தூத்துக்குடிக்கும் நிவாரணம்; உடைமை சேத இழப்பீடு விவரம்!

பெருமழையின் காரணமாக பாதிக்கப்பட்ட வீடுகளை இழந்த மக்களுக்கும், விவசாயப் பெருங்குடி மக்களுக்கும், கால்நடை இழப்பைச் சந்தித்திருக்கக்கூடிய மக்களுக்கும் தமிழ்நாடு அரசு தேவையான நிவாரணத்தை வழங்கும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் நெல்லையில் இன்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். 

அவர் அப்போது மேலும் கூறியது:

“இந்த மழை, வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு, இழப்பீட்டுத் தொகையை ரூபாய் 4 இலட்சத்திலிருந்து, 5 இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கிடவும்;

சேதமடைந்த குடிசைகளுக்காக ஏற்கனவே வழங்கப்படும் தொகை ரூபாய் 5 ஆயிரத்தினை, ரூபாய் 10 ஆயிரமாக உயர்த்தி வழங்கிடவும்;

மழையினால் 33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாகப் பாதிக்கப்பட்ட நெற்பயிர் உள்ளிட்ட இறவைப் பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 13 ஆயிரத்து 500 ரூபாயிலிருந்து, 17 ஆயிரம் ரூபாயாக உயர்த்திவழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

பல்லாண்டு பயிர்கள் மற்றும் மரங்கள் 33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாகச் சேதமுற்றிருப்பின், இழப்பீடாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூபாய் 18 ஆயிரம் ரூபாயிலிருந்து, 22 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கிடவும்;

மழையினால் 33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாகப் பாதிக்கப்பட்ட மானாவாரிப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 7,410 ரூபாயிலிருந்து, 8,500 ரூபாயாக உயர்த்தி வழங்கிடவும்;

33,000 ரூபாயாக இருந்த எருது, பசு உள்ளிட்ட கால்நடைகளின் உயிரிழப்பு நிவாரணத்தை, 37,500 ரூபாயாக உயர்த்தி வழங்கிடவும்;

3,000 ரூபாயாக இருந்த வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழப்பு நிவாரணத்தை 4,000 ரூபாயாக உயர்த்தி வழங்கிடவும்;

சேதமடைந்த படகுகள் மற்றும் வலைகளுக்கு நிவாரண உதவிகளைப் பொறுத்தவரையில், முழுமையாக சேதமடைந்த கட்டுமரங்களுக்கு (மீன்பிடி வலைகள் உட்பட), 32,000 ரூபாயிலிருந்து, 50 ஆயிரம் ரூபாயாகவும், பகுதியாக சேதமடைந்த கட்டுமரங்களுக்கு 10 ஆயிரம் ரூபாயிலிருந்து, 15 ஆயிரம் ரூபாயாகவும், முழுவதும் சேதமடைந்த வல்லம் வகை படகுகளுக்கு வழங்கப்படும் அதிகபட்ச மானியத் தொகை ரூபாய் 75 ஆயிரத்திலிருந்து, ஒரு இலட்சம் ரூபாயாகவும், முழுவதும் சேதமடைந்த இயந்திரப் படகுகளுக்கு வழங்கப்படும் அதிகபட்ச மானியத் தொகை ரூபாய் 5 இலட்சத்திலிருந்து, ரூபாய் 7 லட்சத்து 50 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்கிடவும், சேதமடைந்த வலைகளுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூபாய் 10 ஆயிரத்திலிருந்து, ரூபாய் 15 ஆயிரமாக உயர்த்தி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

அதி கனமழையின் காரணமாக, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மிகக் கடுமையாக வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள வட்டங்களில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக 6 ஆயிரம் ரூபாயாக வழங்கப்படும்.

இந்த மாவட்டங்களில் உள்ள இதர வட்டங்களுக்கும் மற்றும் கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களிலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு அங்குள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1000 ரூபாய் வழங்கப்படும்.

அமைச்சர்களும், அதிகாரிகளும் இறுதிவரை இங்கேயே தங்கி மக்கள் காப்புப் பணிகளில் நிச்சயமாக ஈடுபட இருக்கிறார்கள்.” என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com