சிறைப்பிடிக்கப்பட்ட அரசுப் பேருந்துகள்
சிறைப்பிடிக்கப்பட்ட அரசுப் பேருந்துகள்

அரசுப் பேருந்தை சிறைப்பிடித்த டோல்கேட் நிர்வாகம் - பயணிகள் தவிப்பு!

சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தவில்லை எனக்கூறி அரசுப் பேருந்தை தனியார் டோல்கேட் நிர்வாகம் தடுத்து நிறுத்தியதால் பயணிகள் அரை மணி நேரத்துக்கும் மேல் அவதிப்பட்டனர்.

இன்று காலை TN.45 N-3983 என்ற பதிவெண் கொண்ட அரசுப் பேருந்து, திருச்சியிலிருந்து நாகப்பட்டினத்துக்குப் புறப்பட்டது. இந்தப் பேருந்து திருச்சி – தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள துவாக்குடி டோல்கேட் வழியாகக் கடந்துசெல்ல முற்பட்டது. ஆனால் அங்கிருந்த ஊழியர்களோ பேருந்தை மேற்கொண்டு செல்லவிடாமல் தடுத்து நிறுத்தினர்.

முதலில் பயணிகளுக்கு ஒன்றும் புரியவில்லை. டோல்கேட் கட்டணம் செலுத்தவில்லை என்பதால், டோல்கேட் நிர்வாகம் பேருந்தை சிறைபிடித்து தெரியவந்தது.

அந்தப் பேருந்துக்குப் பின்னாலும் பல வண்டிகள் வரிசைகட்டி நிற்க ஆரம்பித்தன. பேருந்துக்குள் இருந்த பயணிகள் தாங்கள் செல்லவேண்டிய இடத்துக்குச் செல்லமுடியாமல் அவதி அடைந்தனர்.

இந்திய மாணவர் சங்கம் - எஸ்.எஃப்.ஐ. முன்னாள் மாநிலத் தலைவரும் அகில இந்திய தொழிலாளர் சங்கத்தின் மாநிலச் செயலாளருமான வீ.மாரியப்பனும் இந்தப் பேருந்தில் பயணம்செய்தார்.

மாரியப்பன், விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலச் செயலாளர்
மாரியப்பன், விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலச் செயலாளர்

நடந்ததைப் பற்றி அவர் தன் முகநூல் பக்கத்தில் எழுதியிருந்தார். அவரைத் தொடர்புகொண்டு பேசுகையில், “ இன்று காலை தஞ்சாவூருக்குச் செல்வதற்காக திருச்சியில் அரசுப் பேருந்து ஒன்றில் ஏறினேன். இது, நாகப்பட்டினம் செல்கிற பேருந்து. துவாக்குடி டோல்கேட்டில் திடீரென நிறுத்திவிட்டார்கள். டோல்கேட்டில் ஊழியர்கள் இல்லை என்பதால் பேருந்து நிறுத்தி வைத்திருக்கிறார்கள் என்று மக்கள் நினைத்தனர். நேரம் ஆக ஆக, பயணிகள் சத்தம் போட ஆரம்பித்தார்கள். ஓட்டுநரிடம் கேட்டபோது, மாதாந்திரக் கட்டணம் செலுத்தவில்லை என்பதால், பேருந்தை போகவிடவில்லை என்றார். அரை மணி நேரம் ஆனதும், பேருந்தைப் பின்னோக்கி எடுத்த ஓட்டுநர், இன்னொரு வழியாக பேருந்தை ஓட்டிச் செல்ல முயன்றார், அப்போதும் டோல்கேட் ஊழியர்கள் பேருந்தை தடுத்து நிறுத்திவிட்டனர்.”என்றவர் தொடர்ந்தார்.

”பணத்தைக் கட்டினால்தான் பேருந்தை செல்லவிடுவோம் என டோல்கேட் நிர்வாகம் சொல்லிவிட்டது. பயணிகளோ நேரம் ஆகிறது என சத்தம்போட... நடத்துநர் அந்த வழியாக வந்த மற்ற பேருந்துகளில் பயணிகளை ஏற்றி அனுப்பிவிட்டார். நான் அங்கிருந்து கிளம்பும்வரை, அந்த அரசுப் பேருந்து அங்கேயேதான் நின்று கொண்டிருந்தது. அடுத்த என்ன ஆனதென்று தெரியவில்லை. “என்று மாரிமுத்து கூறினார்.

நாடு முழுவதும் டோல்கேட்டில் ஊழல் என பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ள நிலையில், அரசுப் பேருந்தையே டோல்கேட் நிர்வாகம் சிறைப்பிடித்திருப்பது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com