மாநகரப் போக்குவரத்துக் கழகம் - எம்டிசி பேருந்து
மாநகரப் போக்குவரத்துக் கழகம் - எம்டிசி பேருந்து

பயணிகளிடம் சில்லறைத் தகராறு - சென்னை நடத்துநர்களுக்கு எச்சரிக்கை!

பயணிகளிடம் சில்லறை தொடர்பாக ஆங்காங்கே நடத்துநர்கள் பிரச்னையில் ஈடுபட்டுவருவது தொடரும்நிலையில், அப்படி செய்தால் நடவடிக்கை எடுக்க நேரிடும் என சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  

சென்னையில் பல இடங்களில் பேருந்துப் பயணிகளுக்கும் நடத்துநர்களுக்கும் சில்லறை தொடர்பாக அன்றாடம் தகராறு நடந்தபடி இருக்கிறது. இரு தரப்புகளிலும் பரஸ்பரம் புகார்களைக் கூறிக் கொள்கின்றனர். ஆனால் பல இடங்களில் சில்லறைக்காக பயணிகளிடம் நடத்துநர்கள் அத்துமீறி நடந்துகொள்வதும் உண்டு. இதுகுறித்து அண்மையில் பெறப்பட்ட புகார்களின்படி, மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் இணை மேலாண்மை இயக்குநர் இன்று சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.  

அதில், “பேருந்துகளில் பேருந்தில் ஏறும்போதே வாக்குவாதத்தில் நடத்துனர்கள் ஈடுபடுவதாக பயணிகளிடமிருந்து தொடர்ந்து புகார்கள் பெறப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக நடத்துநர்களுக்கு வழங்கப்படும் உரிய அறிவுறுத்தல் என்னவெனில், பயணிகள் பேருந்தில் ஏறும்போதே பயணச்சீட்டு வாங்க சில்லறையாக கொடுக்க வேண்டுமென நிர்பந்தம் செய்யக்கூடாது. பயணச்சீட்டைப் பெற பயணிகள் அளிக்கும் பணம், நாணயங்களைப் பெற்று உரிய மீதி தொகையை வழங்கவேண்டும்.

பணிமனைகளில் பணியின்போது நடத்துநர்களுக்கு வழங்கப்படும் முன்பணம் (Imprest amount)-ஐ, பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்கும்போது முறையாகப் பயன்படுத்தவும், பயணிகளிடத்தில் சில்லறை தொடர்பான விவாதங்களைத் தவிர்த்து அவர்களிடத்தில் கனிவுடன் நடந்துகொள்ள வேண்டுமெனவும் உத்தரவிடப்படுகிறது. மேலும் இது தொடர்பாக புகார் பெறப்படின் சம்மந்தப்பட்ட நடத்துநரின் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே, அனைத்து கிளை மேலாளர்கள், உதவி கிளை மேலாளர்கள்(போ) மற்றும் அணைத்து நேரக்காப்பாளர்கள் ஆகியோர் இது குறித்து நடத்துநர்களுக்கு தெளிவாக எடுத்துக்கூறி அவர்களிடம் கையொப்பம் பெற்று எதிர் காலத்தில் இத்தகைய புகார் எதும் எழாமல் பணிபுரிய அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.” என்று மா.போ.க.வின் இணை மேலாண்மை இயக்குநர்தெரிவித்துள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com