பிரதமர் மோடியுடன் எடப்பாடி பழனிசாமி
பிரதமர் மோடியுடன் எடப்பாடி பழனிசாமி

பா.ஜ.க. கூட்டணி இல்லை- அ.தி.மு.க. அதிகாரபூர்வ அறிவிப்பு

பாஜக உடன் கூட்டணி இல்லை என்று அதிமுக அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அ.தி.மு.க. தலைமைக்கழகம் இன்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கை:

"தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைமை, கடந்த ஒரு வருட காலமாக திட்டமிட்டே, வேண்டுமென்றே, உள்நோக்கத்தோடு, அ.இ.அ.தி.மு.க. மீதும், அண்ணாவையும் ஜெயலலிதாவையும் அவதூறாகப் பேசியும், எங்களின் கொள்கைகளை விமர்சித்தும் வருகின்றது.

மேலும், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைமை, கடந்த 20.08.2023 அன்று மதுரையில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க, “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டை" சிறுமைப்படுத்தியும், 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களை வழிநடத்தி வரும், எங்கள் பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியைப் பற்றி அவதூறாக விமர்சித்தும் வருகிறது. இந்தச் செயல், கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று மாலை (25.9.2023 – திங்கட் கிழமை), நடைபெற்ற தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களின் எண்ணத்திற்கும், விருப்பத்திற்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, அ.இ.அ.தி.மு.க. இன்று முதல், பாரதிய ஜனதா கட்சியில் இருந்தும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தும் விலகிக் கொள்கிறது." என்று அ.தி.மு.க. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com