பாஜக தலைவர் போல ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார்: அமைச்சர் தங்கம் தென்னரசு

திராவிடத்துக்கு ஆளுநர் ஆர்என் ரவி தவறான பொருள் சொல்வதாக அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்துள்ளார்.

திமுக அரசு உடனான அனுபவம் குறித்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்துள்ளார். திராவிட மாடல் என்ற ஒன்றே கிடையாது என்றும், ஒரே நாடு ஒரே பாரதம் என்ற முழக்கத்திற்கு எதிரானது திராவிட மாடல் வாசகம் என்று பல்வேறு கருத்துகளை கூறினார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,   “ஆளுநர் ஆர்.என்.ரவி தனது ஆளுநர் பணியைத் தவிர அனைத்துப் பணிகளையும் செய்கிறார். சனாதன வகுப்பு  எடுக்கிறார். ஆரியத்துக்கு ஆலாபனை பாடுகிறார். திராவிடத்துக்குத் தவறான பொருள் சொல்கிறார். திருக்குறளைத் திரிக்கிறார். சிவாஜி என் படையெடுத்து வந்தார் என்ற வரலாற்றை மறைக்கிறார்.

தனக்குத் தோன்றும் புதிய காரணங்களை புனைவு காரணங்களைக் குடிமைப் பணித் தேர்வுக்குத் தயாராகி வரும் மாணவர்களைக் கூட்டி வைத்துக் கொண்டு சட்டத்துக்குப் புறம்பான விளக்கங்கள் சொல்கிறார்.

அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானதையே பேசுகிறார். மதச்சார்பற்ற நாட்டில் பொறுப்புள்ள பதவியில் உள்ளதை மறந்துவிட்டு பேசுகிறார். தான் மேற்கொண்ட பதவிப் பிரமாணத்தை மீறி பொதுவெளியில் நிர்வாக விவரங்களைச் சொல்லி வருகிறார். இப்படி ஆளுநர் பதவிக்கு அழகில்லாத, அடிப்படையில்லாத செயல்களை மட்டுமே செய்து வருகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

தனிப்பட்ட ரவியாக இருந்தால் அதனை மதிக்கத் தேவையில்லை. ஆனால், ஒரு மாநிலத்தின் ஆளுநராக இருப்பதால்- அதுவும் தமிழ்நாட்டின் ஆளுநராக இருப்பதாக பதில் சொல்லியாக வேண்டியிருக்கிறது. இங்கு வந்து பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டது முதல், அவர் சொல்லி வரும் அபத்தமான கருத்துகளுக்கும் தொடர்ந்து எதிர்வினையாற்றி வருகிறது திமுக

காரணம், அந்த அடிப்படையற்ற கருத்துகள் மறுக்கப்படாவிட்டால் அவை சரியானதோ என சிலரேனும் தவறாக நினைத்துவிடக் கூடும். தமிழ்நாட்டின் ஜனநாயகச் சக்திகளின் கடுமையான கண்டனத்துக்குரியவராக அவர் இருந்து வருவதை நாட்டுமக்கள் நன்கு அறிவார்கள். 40-க்கும் மேற்பட்டோரின் மரணத்துக்குக் காரணமான ஆன்லைன் ரம்மி தடை மசோதாவைக் கூட பல மாதங்கள் தனது நாற்காலிக்கு கீழே போட்டு உட்கார்ந்து கொண்டிருந்தார் ஆளுநர்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் இவரது நடவடிக்கைகளுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றிய அன்றுதான் உடனடியாகக் கையெழுத்து போட்டு அனுப்பினார்.

இதன் மூலம், இவர் எத்தகைய மனிதர் என்பதை மக்கள் அறிந்திருப்பார்கள். இப்படி தடித்த தோலுடன் இருக்கக் கூடிய  ஆளுநர் 'டைம்ஸ் ஆப் இந்தியா' ஆங்கில நாளேட்டுக்கு ஒரு பேட்டியை இன்று வழங்கி இருக்கிறார். பேட்டியை முழுமையாகப் படிக்கும்போது, அவர் ஆளுநர் பதவிக்காக தமிழ்நாட்டுக்கு வரவில்லை, பா.ஜ.க. தலைவர் பதவிக்காக வந்தவர் என்பதை உணர முடிகிறது.

கமலாலயத்தில் உட்கார்ந்திருக்க வேண்டியவர், ராஜ் பவனில் உட்கார்ந்து அரசியல் செய்துகொண்டு இருக்கிறார் என்பதைத்தான் அந்தப் பேட்டி காட்டுகிறது. ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் சட்டமன்றம் கூடும்போது ஆளுநர் உரை இடம் பெறுவது என்பது மரபு ஆகும். அந்த உரையை தயாரித்து வழங்குவது மாநில அரசின் பணியே ஆகும். அதனை வாசிக்க வேண்டியதுதான் ஆளுநரின் வேலை.

அப்படி மாநில அரசால் தயாரித்து அளிக்கப்பட்ட வாசிக்காமல், திரித்தும் மாற்றியும் விட்டுவிட்டு உரையை புதிதாகச் சேர்த்தும் ஆளுநர் வாசித்தார். இது அவை மீறல் ஆகும்.  ஜனநாயக மீறல் ஆகும். எனவேதான், 'அரசால் அளிக்கப்பட்ட உரையே இடம்பெறும்' என்ற தீர்மானத்தை முதலமைச்சர் கொண்டு வந்து அனைவர் ஆதாவுடன் நிறைவேற்றினார்கள்.  இதில் என்ன தவறு இருக்க முடியும். ஆளுநால் அவமானப்படுத்தப்பட்ட அவை மாண்பு,  முதலமைச்சரின்  தீர்மானத்தால் அன்றைய தினமே  சரிசெய்யப்பட்டது.

எழுதித் தந்ததில் உடன்பாடு இல்லை என்கிறார் ஆளுநர். எழுதித் தந்ததைப் படிக்க வேண்டும் என்பதுதான் விதி, அதுதான் நடைமுறை. அது அவருக்கு விருப்பம் இல்லை என்றால், அவர் உரையாற்றவே வந்திருக்கக் கூடாது. ஆளுநர் பதவி என்பது மாநில அரசின் பிரதிபலிப்பே தவிர, தனிப்பட்ட அதிகாரங்கள் கொண்ட பதவி அல்ல. அந்தப் பதவிக்கு வந்தவர், அதன் தன்மையோடுதான் நடந்து கொள்ள வேண்டுமே தவிர, தனி ஆவர்த்தனம் காட்ட முனையக் கூடாது.

எழுதி வழங்கியதை வாசிக்க வேண்டும். விருப்பம் இல்லாவிட்டால் அவர் வேறு வேலையைப் பார்த்துக் கொள்ள வேண்டுமே தவிர, அவையின் மாண்பைக் குலைக்கும் உரிமை எவருக்கும் இல்லை.

2002-ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற கோத்ரா ரயில் எரிப்பும் - அதன் பிறகு கலவரங்களும் நடந்தபோது, அந்த மாநில ஆளுநர் குஜராத் அமைதியில்லா மாநிலம் என்று உரையாற்றினாரா அல்லது குஜராத் அரசு தயாரித்துக் கொடுத்த உரையை அப்படியே ஆற்றினாரா என்பதை ஆளுநர் கூற வேண்டும்.

மசோதா நிலுவையில் இருப்பதற்கும் நிறுத்தி வைப்பதுக்கும் விளக்கத்தை ஆளுநரே விளக்க வேண்டும் என்றும் இன்றைய நிலவரப்படி, 17 மசோதாக்கள் அவரிடம் உள்ளதாகவும் கூறினார். தரவுகள் அடிப்படையில் அமைச்சர்கள் அளித்த குற்றச்சாட்டுக்கு ஆளுநர் அலுவலகம் உரிய விளக்கம் தராமல், உண்மைக்கு புறம்பானது என்று மட்டும் சொல்வது சரியல்ல என்று குறிப்பிட்டுள்ளார். இது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு சமம் என்றும் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com