பெரியார் பற்றி புத்தகம் எழுதக்கூடாதா?- துணைவேந்தருக்கு எதிராக தி.க. போராட்ட எச்சரிக்கை!

பெரியார் பற்றி புத்தகம் எழுதக்கூடாதா?- துணைவேந்தருக்கு எதிராக தி.க. போராட்ட எச்சரிக்கை!

”தந்தை பெரியாரைப் பற்றி நூல் எழுதிய பேராசிரியர் மீது நடவடிக்கை எடுத்து துணைவேந்தர், அதை விலக்கிக் கொள்ளாவிட்டால், திராவிடர் கழகத்தின் சார்பில் பெரும் போராட்டம் நடத்தப்படும்” என்று அவ்வமைப்பின் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

இதுகுறித்த அவரின் அறிக்கை விவரம்:

”சேலம் கருப்பூரில் தமிழ்நாடு அரசின் பெரியார் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக சமயம் சார்ந்த நிகழ்வுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பல்கலைக்கழக நிர்வாகத்தினர் தமிழ்நாடு அரசின் கொள்கைகளுக்கு எதிராகவும், ஆர்எஸ்எஸ், பா.ஜ.க.விற்கு ஆதரவாகவும் நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாக குற்றச்சாட்டு ஏற்கெனவே உள்ளது.

அப்பல்கலைக் கழகத்தில் இதழியல் துறை இணைப் பேராசிரியரான சுப்பிரமணி, அங்குள்ள கலைஞர் ஆய்வு மய்யத்தின் இயக்குநராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். சமீபத்தில் இவரை, பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராக உயர்கல்வித்துறை நியமித்தது.

தந்தை பெரியாரின் போராட்டங்கள் தொடர்பாக இவர் எழுதிய `பெரியாரின் போர்க்களங்கள்’ என்ற புத்தகம் கடந்த ஆண்டு வெளியானது. தொடர்ந்து, ஏற்கெனவே இவர் எழுதிய `மெக்காலே பழமைவாதக் கல்வியின் பகைவன்’ என்ற நூலின் மறுபதிப்பும் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த நூல்களை எழுதியதற்காக ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என விளக்கம் கேட்டு சமீபத்தில் பல்கலைக்கழக நிர்வாகம் பேராசிரியர் சுப்பிரமணிக்கு மெமோ வழங்கியது.


கலை, இலக்கியம், அறிவியல், கல்வியியல் மற்றும் கலாச்சார தன்மையுடைய விவகாரங்களுக்கு, எந்தவித முன் அனுமதியும் பெறத் தேவையில்லை என்ற விதி உள்ளது. ஆனால், பெரியார் குறித்த புத்தகம் எழுதியதற்காக பேராசிரியருக்கு மெமோ வழங்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக இருக்கக் கூடியவரின் தொடர் நடவடிக்கைகள் - அவர் ஒரு ‘காவி’ உடை அணியாத ஆர்.எஸ்.எஸ்.காரரோ என்ற விமர்சனம் வெடித்துக் கிளம்பியுள்ளது.
தந்தை பெரியார் பிறந்த நாளை ‘‘சமூகநீதி’’ நாளாக தமிழ்நாடு அரசு அறிவித்ததோடு, அன்றைய நாளில் சமூகநீதியைக் கடைப்பிடிப்போம் என்று அரசுப் பணியாளர்கள் உறுதிமொழியை எடுக்கவேண்டும் என்று உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் அத்தகைய உறுதிமொழி எடுக்கப்பட்டதா என்று தெரியவில்லை.

இந்த நிலையில் பெரியார் பெயரில் இருக்கக்கூடிய பல்கலைக் கழகத்தில் பெரியார்பற்றி நூல் எழுதக் கூடாது என்று கூறுவது எத்தகைய அடாவடித்தனம்? எத்தகைய கேலிக் கூத்து!


தமிழ்நாடு அரசு - குறிப்பாக உயர்கல்வித் துறை அந்தக் காவி படிந்த துணைவேந்தர்மீது உரிய நடவடிக்கையை எடுக்கவேண்டும்.
இணைப் பேராசிரியர் சுப்பிரமணி மீது பல்கலைக் கழகம் எடுத்துள்ள நடவடிக்கையை ஒரு வாரத்துக்குள் விலக்கிக் கொள்ளவேண்டும்; இல்லையெனின் மிகப்பெரிய போராட்டத்தை பல்கலைக் கழகம் சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கின்றோம்.” என கி.வீரமணி தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com