அரசுப் போக்குவரத்துக் கழகஊழியர்கள்தொடர்பான நியாயமற்ற நடவடிக்கைகள் இந்தஆட்சியிலும்தொடரக்கூடாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
”தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் இன்று காலையிலிருந்து காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நீண்ட காலமாக தீர்வு காணப்படாமல் நீடிக்கும் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2023 டிசம்பர் 19 ஆம் தேதி தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த அறிவிப்பை அரசுக்கு வழங்கியுள்ளன. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத்துறை அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தினாலும், அதில் தீர்வு எதுவும் ஏற்படாதது, தொழிலாளர்களை வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு நெட்டித் தள்ளியுள்ளது.
தனது ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு பல்வேறு தீமைகள் செய்து வஞ்சித்த அ.இ.அ.தி.மு.க., இந்த நியாயமான போராட்ட சூழலை தனது அரசியலுக்காக பயன்படுத்துகிறது. தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படியை நிலுவையிலேயே வைத்திருப்பது, ஓய்வூதியர்களையும் இது பாதிப்பது, சட்டபூர்வமாக வழங்க வேண்டிய பணிக்கொடை மற்றும் ஓய்வுகால நலன்களை வழங்குவதில் பெரும் காலதாமதம் ஏற்படுவது போன்ற நியாயமற்ற நடைமுறைகள், இந்த ஆட்சியிலும் தொடர்வதற்கு அரசு அனுமதிக்கக் கூடாது.
நெருக்கடியான நிலையில் போக்குவரத்து தொழிலாளர் பிரச்சினையில் முதலமைச்சர் நேரடியாக தலையிட்டு, தொழிற்சங்க தலைவர்களை அழைத்துப் பேசி தீர்வு காண வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.” என்று முத்தரசன் தன் அறிக்கையில் கூறியுள்ளார்.