மதுரை எய்ம்ஸ் - டெண்டர் விட்டது மத்திய அரசு
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான டெண்டர் கோரி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்காக ஜப்பான் நிறுவனத்திடம் ரூ.1,967 கோடி கடன் பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ள. இந்நிலையில் மருத்துவமனையின் கட்டுமானப் பணிக்கான ஒப்பந்தப் புள்ளி இன்று கோரப்பட்டுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு தமிழகத்தில் எய்ம்ஸ் கட்டப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், 2018இல் மதுரை தோப்பூரில் அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டது. மருத்துவமனை அமைப்பதற்காக தமிழக அரசின் சார்பில் 222.49 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. பின்னர், 2019 ஜனவரி மாதத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி மதுரைக்கு வந்து அடிக்கல் நாட்டினார்.
ஆனால், நான்கு ஆண்டுகள் கடந்தும் கட்டுமானப் பணி தொடங்கப்படவில்லை. தமிழக அரசியல் கட்சிகள் தொடர்ந்து மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியும், விமர்சித்தும் வருகின்றன. அண்மையில் நாடாளுமன்ற மக்களவையிலும் இதுதொடர்பாக திமுகவுக்கும் அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் இடையே கடுமையான வாக்குவாதமும் நடைபெற்றது.
மைய அமைச்சர் நிர்மலா தவறான தகவலை அளித்ததாக, மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்தார்.
இந்த நிலையில்தான், எய்ம்ஸ் கட்டுமானத்துக்காக ஜப்பானின் ஜெய்கா நிறுவனத்திடம் மைய அரசு ரூ.1,967 கோடி கடன் பெற்றுள்ளது. அதன்படி, கட்டுமானப் பணிக்கான ஒப்பந்தப் புள்ளி இன்று வெளியாகியுள்ளது.
தகுதியுள்ள ஒப்பந்ததாரர்கள் செப்டம்பர் 18-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்றும் அடுத்த 33 மாதங்களுக்குள் கட்டுமானப் பணியை முடிக்கவேண்டும் என்றும் ஒப்பந்தப் புள்ளி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.