மாநில அளவில் சி.பி.எம். கட்சிக்கு பேரணி அனுமதி இல்லை
மாநில அளவில் போராட்டம் நடத்துவதற்கான அனுமதியை மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டு கட்சிக்கு காவல்துறை தராதநிலையில், உள்ளூர் அளவுக்கு அனுமதி பெறலாம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டு கட்சியின் 50ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, அக்டோபர் 21அம் தேதி முதல் 31ஆம் தேதிவரை மாநிலம் முழுவதும் பேரணி நடத்த தீர்மானிக்கப்பட்டது. மத்திய அரசு மதவாதக் கொள்கைகளைக் கடைப்பிடிப்பதாகக் கூறி, அதைக் கண்டித்தும் இந்த நிகழ்வுகள் நடத்தப்படுவதாக, காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவாலிடம் அனுமதி கோரப்பட்டது. அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அளித்த மனுவுக்கு, அனுமதி தரப்படாததால் உயர்நீதிமன்றத்தில் அவர் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது.
நேற்று இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், அந்தந்த ஊர் காவல்துறையினரிடம் அனுமதி கோரி கடிதம் அளிக்கவும், அதை காவல்துறையினர் ஏழு நாள்களுக்குள் பரிசீலித்து உத்தரவிடவும் ஒருவேளை ஏதாவது இடையூறுகள் இருந்தால் வேறு தேதிகளில் அனுமதி வழங்கலாம் என்றும் உத்தரவிட்டார்.
முன்னதாக காவல்துறையின் தரப்பில் வாதிட்ட வழக்குரைஞர் உதயகுமார், ”இதுபோன்ற பேரணிக்கு மாநிலம் முழுவதற்கும் தலைமை இயக்குநர் அனுமதி தரமாட்டார். இதுதொடர்பாக மனுதாரருக்கு கடந்த 17ஆம்தேதி கடிதம் அனுப்பப்பட்டுவிட்டது. மாநகர, மாவட்ட, வட்ட அளவில் நிலவும் சூழலுக்கு ஏற்ப அதிகாரிகள் முடிவுசெய்வார்கள்.”என்று கூறினார்.
இதேசமயம், தென்மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு பல மாவட்டங்களிலும் ஒருசேர நிகழ்ச்சி நடத்த காவல்துறை அனுமதி அளிக்க முன்னதாக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது, குறிப்பிடத்தக்கது.